விலகுவதே நல்லது: ஷாரிசாட்டுக்கு ரபிடா அசீஸ் அறிவுரை

அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், கட்சியிலும் அரசாங்கத்திலும் வகிக்கும் பதவிகளிலிருந்து விலக வேண்டும். இவ்வாறு கருத்துரைத்திருப்பவர் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அப்துல் அசீஸ். 

இன்று மலாய் மெயில் நாளேட்டில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சர் ரபிடா,  ஷாரிசாட்டைக் குறிப்பிடும் வகையில், “கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் உங்களால் ஒரு பிரச்னை என்றால், தயை செய்து விலகி விடுங்கள்”, என்றார்.

“இதை எல்லாருக்கும் பொதுவாகக் கூறுகிறேன்.அது மாட்டுடன் தொடர்புகொண்ட விவகாரமாகவோ வேறு எதுவுமாகவோ இருக்கலாம். உங்கள் பிரச்னைக்கு அதுவே பக்குவமான தீர்வாகும்”, என்றாரவர்.

பதவி விலகும் முடிவைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமே விட்டுவிடுவதாக ஷாரிசாட் கூறியுள்ளதையும் ரபிடா சாடினார்.

“நீங்களே முடிவு செய்யுங்கள். அதென்ன முடிவெடுக்கும் பொறுப்பைப் பிரதமரிடம் விடுவது”, என்றவர் வினவினார்.

நேசனல் ஃபீட்லோட் கார்பரேசன்(என்எப்சி) ஊழலில் அவரின் குடும்பத்தார் சம்பந்தப்பட்டுள்ளதன் தொடர்பில் ஷாரிசாட் பல தரப்புகளின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

கால்நடை வளர்ப்புக்காக அரசாங்கம் எளிய நிபந்தனைகளில் கடனாக கொடுத்த ரிம250மில்லியன் நிதியை என்எப்சி அத்தொழிலுடன் தொடர்பில்லாத விசயங்களுக்குச் செலவிட்டிருப்பதாக பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிசி ரம்லி போன்றவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாரிசாட் என்எப்சியில் தமக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ளார். அவரின் குடும்பத்தாரும் நிறுவனம் குற்றம் எதையும் செய்யவில்லை என்றே கூறுகின்றனர்.

இதனிடையே, மலாய் மெயில் நேர்காணல் குறித்துக் கருத்துரைத்த அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி, ஷாரிசாட் பதவி விலக வேண்டும் என்று ரபிடா முன்மொழிந்திருப்பதைத் தாம் வரவேற்பதாகக் கூறினார்.

TAGS: