பிகேஆர், ஷாரிஸாட் வேலைக்கு திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன் வரவேற்கும்

நெருக்கடியில் சிக்கியுள்ள மகளிர் சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் அடுத்த வாரம் வேலைக்கு திரும்புகிறார். அவர் மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்புவதை இன்னும் அதிகமான தகவல்களை அம்பலபடுத்துவதுடன் வரவேற்கும்.

அந்த அமைச்சருடைய குடும்பம் வாங்கிய சொத்துக்கள் மீது கூடுதலான தகவல்களை வரும் புதன் கிழமை பிகேஆர் வெளியிடும் என அந்தக் கட்சியின் வியூகப் பிரிவுத் தலைவர் ராபிஸி ராம்லி கூறினார்.

“என்றாலும் அந்தச் சொத்துக் கொள்முதல்கள், அந்தக் குடுபத்துக்குச் சொந்தமானதும் ஊழலில் மய்யமாகத் திகழும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் சம்பந்தப்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.”

“ஷாரிஸாட் இந்த வாரம் வேலைக்குத் திரும்புகிறார். ஆகவே நாங்கள் அவரை சில விஷயங்களுடன் வரவேற்போம். அந்தக் குடும்பம் வாங்கியிருக்கக் கூடிய அதிகமான சொத்துக்கள் பற்றி நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிரோம். அடுத்த வாரம் நாங்கள் அவற்றில் ஒன்று குறித்து தகவல் வெளியிட முடியும்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

சிங்கப்பூரில் அந்தக் குடும்பம் 10 மில்லியன் ரிங்கிட் பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை சொந்தமாக வைத்துள்ளதாக பிகேஆர் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த வீட்டை வாங்குவதற்கு என்எப்சி நிதிகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அது எந்த ஆதாரத்தையும் வழங்க முடியவில்லை.

அந்த விவகாரம் மீது ஷாரிஸாட் குடும்பத்தினர் இது வரை மௌனம் சாதித்து வருகின்றனர். ஆனால் கோலாலம்பூரில் என்எப்சி பெயரில் இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்குவதற்கு அரசாங்கம் எளிய நிபந்தனைகளுடன் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனில் ஒரு பகுதியைப் பயன்படுத்தியதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

TAGS: