சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமர் டோ சின் சைய் காலமானார்

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமரும் மக்கள் செயல் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான டாக்டர் டோ சின் சைய் இன்று காலையில் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 90.

மலேசியா, பேராக் மாநிலத்தில் 1921 ஆண்டில் பிறந்த டோ, சிங்கப்பூர் குடியரசின் லி குவான் இயு, எஸ். இராஜரெத்தனம் மற்றும் கோ செங் சுவி போன்ற முக்கியமான முதல் தலைமுறை தலைவர்களில் ஒருவராவார்.

ஒரு சைக்கிள் கடை உரிமையாளரின் மகனான டோ, ஈப்போ அங்லோ சீன பள்ளியில் படிப்பதற்கு உபகாரச் சம்பளம் பெற்றார். பின்னர், சிங்கப்பூர் ரேஃபல் கல்லூரியிலும், லண்டனில் உடற்கூறு இயலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

நவம்பர், 1954 இல், மக்கள் செயல் கட்சி (பிஎபி) தோற்றுவிக்கப்பட்டபோது, டோ அதன் முதல் தலைவராக் தேர்வு செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு வரையில் அவர் சிங்கப்பூர் அமைச்சரவையின் உறுப்பினராக இருந்துள்ளார்.

1988 ஆம் ஆண்டு அவரது 67 ஆம் வயதில், டோ ரோகோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவருக்கு ஒரு மருமகனும் நான்கு பேரப்பிள்ளைகளும் இருக்கின்றனர்.

சிங்கப்பூர் பிரதமரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் டோவின் மரணம் குறித்து தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை டோவின் குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொண்டனர்.

டோவின் ஈமச் சடங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மண்டாய் கிரிமடோரியத்தில் நடைபெறும். டோவின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு சம்பந்தமான  உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் அலுவலகம் விடுத்த ஓர் அறிக்கை தெரிவித்தது.

ஈமச்சடங்கு நடைபெறும் தினத்தில் டாக்டர் டோவுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் அனைத்து அரசாங்கக் கட்டடங்களிலும் சிங்கப்பூர் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அரசாங்க அறிக்கை கூறிற்று.

-பெர்னாமா