சிங் ஆன் பூய்: கோமாளி, அண்மையில் வெளிவந்த கருத்துக் கணிப்பில் இந்தியர்கள் பாலிசானுக்கு திரும்பி விட்டார்கள் என்கிறது? சீனர்கள் பாலிசானை விட்டு போகும்போது ஏன் இந்தியர்கள் திரும்புகிறார்கள்.
கோமாளி: முதலில் பூய், நீ பாரிசான் என்று சொல்ல வேண்டும். அந்தக் கருத்துக்கணிப்பை நானும் பார்த்தேன். சுமார் 1,000 நபர்களில், நூறு இந்தியர்களை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்டார்களாம். அதில் 65 விழுக்காடு பாலிசானுக்குத்தான் என்று பதில் சொன்னார்களாம்.
அண்மைய காலங்களில் இந்தியர்களுக்கு சில திடீர் திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள், ஆலயங்களுக்கு கேட்காமலேயே மானியம், குடியுரிமைக்கான உதவி, மேல்நிலை கல்விக்கான கடனுதவி, பாலர்ப்பள்ளி அமைப்பு நிதி இப்படியாக விருந்து, உபசரிப்பு போன்ற நிகழ்வுள்ள பல நடந்து வருகின்றன. இவற்றில் சிக்கித் தவிக்கும் மக்கள், கிடைக்கும் நிலையில் பெற வேண்டியதை பெற்ற மறுப்பது முட்டாள்தனம் என்ற எண்ணமும் கொண்டுள்ளனர். அதேவேளையில், இந்த கருத்துக் கணிப்புகளை திசை திருப்ப பிரதம இலாகா சுமார் 10 இலட்சம் இந்தியர்களின் தொலைபேசி எண்களை அவ்வப்போது சுழற்றி சத்து மலேசியா பற்றி பேசுவதும் உண்டாம்.
கோமாளி கலந்துகொண்ட சில பொதுக்கூட்டங்களில் உள்ள மக்களின் பார்வையில் நஜிப் கொண்டுள்ள நடவடிக்கைகளில் நாட்டம் இருந்தாலும் அம்னோ மீது ஆழ்ந்த அருவருப்பை கொண்டுள்ளதை காண முடிகிறது.
ஒரு நெருங்கிய மஇகா மேல் தலைவரோடு உரையாடும்போது, அவர் விரக்தியில் மஇகா, அம்னோவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை ஒப்புக்கொண்டதோடு இந்தியர்களின் ஆதரவை 20 விழுக்காடு அளவிலேயே தன்னால் கணிக்க முடிகிறது, என்றார்.
பூய், பயப்படத் தேவையில்லை இந்தியர்களுக்கு இன்றுள்ள தெளிவு நிலையை, தொலைபேசி வழியும் பரிசுக்கூடைகள் வழியும் மாற்றுவது குதிரைக் கொம்பாகும். மேலும் இடைத்தேர்தல்களின் முடிவுகளைக் கண்டு இந்தியர்கள் பாலிசானுக்கு திரும்பி விட்டார்கள் என கூறுவது பலவீனமான கருத்தாகும்.