தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிப்பில் பாஸ் மும்முரம்

13வது பொதுத் தேர்தல் “தேர்தல்களுக்கெல்லாம் பெரிய தேர்தல்” என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் குறிப்பிட்டபோது பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா, பாரிசான் நேசனல் மிகப் பெரிய தோல்வியைத் தழுவப்போகும் மிகப் பெரிய தேர்தல்தான் அது என்று குத்தலாகக் கூறினார்.

கூறியது மட்டுமல்ல,பிஎன்னை மண்ணைக் கவ்வ வைத்து புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளிலும் பாஸ் மும்முரமாக இறங்கியுள்ளது.

இப்போது அக்கட்சி தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையைத் தயாரித்து வருகிறது. தயாரித்து முடிந்ததும் அதை அது பக்காத்தான் ரக்யாட்டிடம் வழங்கும்.

அந்தக் கொள்கை அறிக்கை மக்களின் அவாக்களை, எதிர்பார்ப்புகளை, கனவுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்றார் ஹுசாம்.

அது, மசீச, மஇகா, அம்னோ ஆகிய கட்சிகளின் கோரிக்கைகளை உள்ளடக்கிய பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கைபோல் ஒரு கட்சியின் ஆவணமாக இருக்காது.

“மக்கள் எங்களிடம் எதைத் தெரிவிக்கிறார்களோ அதுதான் அதில் இருக்கும், எங்கள் கருத்துகளை மக்கள்மீது சுமத்த முற்பட மாட்டோம்.

“தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு விவகாரங்களுக்கும் எப்படித் தீர்வுகாண விரும்புகிறார்கள் என்று மக்களே எங்களுக்குத் தெரிவிக்க இடமளிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை”, என்று சாலோர் சட்டமன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.

“திட்டங்களும் கொள்கைகளும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.தங்களுக்கு என்ன தேவை என்பதை மக்களே தீர்மானிக்க இடமளிக்க வேண்டும், மற்றவர்கள் அதைத் தீர்மானிக்கக் கூடாது என்ற விதியைத் தங்கம்போல் போற்றி வருகிறோம்”, என்றவர் வலியுறுத்தினார்.

இதன் தொடர்பில் தேவையான தலவல்களை தன் ஃபேஸ்புக் உறுப்பினர்களிடமிருந்தும் இணையத்தின் மற்ற தளங்களிலிருந்தும் வேறு பல தரப்புகளிடமிருந்தும் பாஸ் திரட்டி வருகிறது.

இதுவரை அது இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. ஒன்று மாணவர் நலக்குழு மற்றொன்று அரசு ஊழியர் நலக் குழு. இரண்டும் அந்ததந்த துறைசார்ந்தோரின் தேவைகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றன.

தேர்தல் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிக் கருத்துரைத்த ஹுசாம், பாஸ் ஐந்து முக்கிய விசயங்களைக் குறி வைத்துச் செயல்படுவதாகக் கூறினார். மாணவருக்கான அரசின் கடனுதவித் திட்ட(பிடிபிடஎன்)த்தை மறுஆய்வு செய்தல், வீடுகள் வாங்கும்போது கொடுக்கப்படும் முத்திரை வரியைக் குறைத்தல், ரிம5,000-க்கும் குறைவான மாத வருமானம் உடையவர்களுக்கு வருமான வரியை ரத்துச் செய்தல் போன்றவை அதில் அடங்கும்.

நிறுவன வரிகளைக் குறைப்பதும் அதன் திட்டமாகும். இது, அண்டைநாடுகளுடன் போட்டியிடுவதற்கு ஏதுவான வணிகச் சூழலை உருவாக்கிக் கொடுக்கும். அத்துடன் சுகாதாரச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியனவாகவும் அவற்றுக்கான கட்டணங்கள் தாங்கக்கூடியவையாகவும் இருப்பதும் உறுதிப்படுத்தப்படும். 

“எங்கள் தேர்தல் கொள்கை அறிக்கை, அன்றாட வாழ்க்கையில் வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றில் மக்களிடம் அதிகரித்துவரும் அச்சத்தைக் கவனத்தில் கொண்டிருக்கும்.

“நாட்டில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்து வருவதால் மக்களுக்கு ஏற்படும் பெரும் சுமையைப் போக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும்”, என்றாரவர்.

TAGS: