பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம், EC தலைவர்

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) ஏப்ரல் மாதம்தான் அதன் இறுதிப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திடம் முன்வைக்கும் என்பதால் பொதுத் தேர்தல் மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜீஸ் முகம்மட் யூசுப்.

பெரித்தா ஹரியனில் இடம்பெற்ற செய்தியில், நாடாளுமன்றம் மே மாதம் கலைக்கப்பட்டால்,அதிலிருந்து 60 நாள்களுக்குள், அதாவது மே அல்லது ஜூனில்13வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“அதற்காக மார்ச் மாதம் பிரதமரால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று நான் சொல்ல வரவில்லை.ஆனால், பிஎஸ்சி-இன் பரிந்துரைகளை இசி செயல்படுத்தும்வரை அவர் காத்திருப்பார் என்றே நினைக்கிறேன்”, என்றவர் கூறியுள்ளார்.

மார்ச் மாதம் தேர்தல் நடந்தால், 2012-இல் வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டவர்கள் வாக்களிக்க இயலாது.ஏனென்றால், இசி அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிய  ஒரு மாதம் பிடிக்கும்.

எதிர்வரும் பொதுத் தேர்தல்  நாட்டின் வரலாற்றில் போட்டிமிகுந்த தேர்தலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறாரா அல்லது புத்ரா ஜெயாவை கைப்பற்றும் குறிக்கோளுடன் செயல்படும் மாற்றரசுக் கட்சி அதன் இலக்கை அடைவதில் வெற்றிபெறுமா என்பதைத் தீர்மானிக்கும்.

TAGS: