அம்னோ தொகுதித் தலைவர்: அந்த ஊழலுக்கு முடிவு காணுங்கள் இல்லை என்றால் மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை எதிர்த்தரப்பு  அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து 13வது பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் அந்த சர்ச்சை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வெளிப்படையாகப் பேசும் அம்னோ தொகுதித் தலைவரான சையட் அலி அல்ஹாபாஷி கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தை சூழ்ந்துள்ள அந்த ஊழல் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி பிஎன் மீதும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவம் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீழ்ச்சி அடைவதைக் காணத் தாம் விரும்பவில்லை என செராஸ் அம்னோ தொகுதித் தலைவரான சையட் அலி சொன்னார்.

“நஜிப்பின் மெச்சத்தக்க தலைமைத்துவம் என்எப்சி விவகாரத்தினானால் கறை படிவதைக் காண நாங்கள் விரும்பவில்லை.  அந்த விவகாரத்தைக் கையாளுவதில் நஜிப் உறுதியாகவும் வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். வாக்காளர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் அம்னோ தலைவர்களைச் சூழ்ந்துள்ள பல பிரச்னைகளைப் பயன்படுத்தி வருவது குறித்தும் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.”

“என்எப்சி போன்ற முக்கியமான பொதுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறி, மக்கள் (வாக்காளர்கள்) தங்கள் ஆதரவை வேறு பக்கம் திருப்பிக் கொண்டால் அதற்காக அவர்களை குறை சொல்லக் கூடாது,” என்றார் சையட் அலி.

சிங்கப்பூரில் ஷாரிஸாட் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு மிக ஆடம்பரமான இரண்டு அடுக்குமாடி வீடுகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படும் தகவல்களை நேற்று பிகேஆர் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து செராஸ் அம்னோ வலைப்பதிவில் அவர் தமது கருத்துக்களை சேர்த்துள்ளார்.

இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளின் விலை 34.6 மில்லியன் ரிங்கிட்

சிங்கப்பூரில் உள்ள மரினா பே பகுதியில் மொத்தம் 34.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளை வாங்குவதற்கு உதவியாக அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை ஷாரிஸாட் குடும்பம் பயன்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக நேற்று பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி தகவல் வெளியிட்டிருந்தார்.

அந்த இரண்டு சொத்துக்களும் ஷாரிஸாட்-டின் கணவர் முகமது சாலே இஸ்மாயிலுக்கும் அவர்களது புதல்வர் வான் ஷாஹினுர் இஸ்ரானுக்கும் சொந்தமானவை.

அண்மைய குற்றச்சாட்டை ஷாரிஸாட் மறுக்கவில்லை என்றால் அது தான் “உண்மை” என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடும் என்றும் சையட் அலி எச்சரித்தார்.

“எதிர்த்தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டு அவதூறு என்றால் அவர்கள் (ஷாரிஸாட் குடும்பத்தினர்) அதனை வெளிப்படையாக மறுக்க வேண்டும். அத்துடன் மக்கள் நம்புவதற்கு பொருத்தமான ஆதாரங்களை கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்.

அம்னோ தொகுதித் தலைவர்கள் அந்தப் பிரச்னையை மக்களுக்கு விளக்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் சையட் அலி வருத்தத்துடன் கூறினார்.

TAGS: