பத்தாமில் பிடிபட்டவர் ஹில்மி மாலெக்:போலீஸ் உறுதிப்படுத்தியது

இந்தோனேசியாவின் பத்தாமில் குடிநுழைவுக் குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் ஹில்மி ஹசிமின் மாலெக் என்பதை கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஹில்மி மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் ஒரு நபராவார். 2009-இல் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் அந்தரங்கப் படங்களை இணையத்தளத்தில் வெளியிட்ட அவர் அதன்பின்னர் தலைமறைவானார்.

அந்நபர் ஹில்மிதான் என்று உறுதிப்படுத்தும் தகவலை கேஎல் குற்றப்புலன் ஆய்வுத் துறை பெற்றிருப்பதாக அதன் தலைவர் கூ சின் வா-வை மேற்கோள்காட்டி உத்துசான் மலேசியா இன்று அறிவித்தது. 

போலி குடிநுழைவு ஆவணங்களை வைத்திருந்ததற்காக ஹில்மி இந்தோனேசிய போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

“சம்பந்தப்பட்ட குற்றத்துக்காக இந்தோனேசிய போலீசார் இன்னமும் அவரை விசாரித்து வருகின்றனர்.

“அவர்களின் விசாரணைக்கு நாங்களும் உதவி வருகிறோம்”, என்றாரவர்.

இணையத் தளத்தில் வெளிவந்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங்கின் படங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ ஹில்மியை கோலாலம்பூர் போலீசார் தேடி வருவதாக கூ கூறினார்.

பெரித்தா ஹரியானும் அந்நபர் ஹில்மிதான் என்பதைத் தகவலறிந்த வட்டாரம் ஒன்று தம்மிடம் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தது.