ஷாரிசாட் பதவிவிலக வேண்டும், கெராக்கான் துணைத் தலைவர்

சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்கு மேன்மேலும் நெருக்குதல் அதிகரித்து வருகிறது.

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) குளறுபடியில் அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவோர் வரிசையில் கெராக்கான் துணைத் தலைவர் சாங் க்கோ யோனும் சேர்ந்துகொண்டிருக்கிறார்.

சாங் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அநியாயமாகவும் கொடூரமாகவும்” சாடுதலுக்கு ஆளாகியுள்ள ஷரிசாட் நிலைகண்டு “மிகவும் பரிவு”கொண்டாலும் பாரிசான் நேசனலின் நலனைக் கருத்தில்கொண்டு அவர் அமைச்சர் பதவியைத் துறப்பதே நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.

“பிஎன்னின் நலனைக் கருத்தில்கொண்டு, ஷாரிசாட் பெருந்தன்மையுடன் அமைச்சர் பதவி துறந்து தம் குடும்பத்தினர்மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

“சர்ச்சை தீர்ந்து அவர் குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆனதும்  அமைச்சரவைக்குத் திரும்பலாம்”, என்றாரவர்.

குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஷாரிசாட்டும் அவரின் குடுமபத்தாரும் நிரபராதிகளே என்பதையும் குறிப்பிட்ட அவர், தங்கள்மீது  கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அக்குடும்பத்தினரும் “திடமான” முறையில் பதிலிறுக்க வேண்டும் என்றார்.

“குற்றச்சாட்டுகளால் எழுந்துள்ள ஐயப்பாடுகளைப் போக்க (அவரின்)குடும்பத்தார் தங்கள் தரப்பு நியாயத்தைத் திடமாக எடுத்துரைக்க வேண்டும்.சான்றுகளையும் காண்பிக்க வேண்டும். பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனங்களுக்கு ஆளாகத்தான் வேண்டியிருக்கும்.”

மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் செய்யும் “தியாகம்” என்எப்சி “சுமையிலிருந்து” பிஎன்னை விடுவிக்கும் என்று சாங் கூறினார்.

இதனிடையே மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்(வலம்), “அம்னோ மற்றும் பிஎன் நலனுக்கு உகந்த வகையில்” ஷாரிசாட் முடிவெடுப்பார் என்று நம்புகிறார்.

“அவர் கட்சியின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவர்.அவரின் அரசியல் விவேகத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு”, என்றவர் குறிப்பிட்டதாக இன்றைய த ஸ்டார் நாளேடு கூறியது.

TAGS: