பினாங்கில் நேற்றிரவு தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்ட ஒரு நபரை ஜாலான் பினாங்கில் 20 போலீஸ்காரர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
பேராக்கைச் சேர்ந்த 30 வயதான எஸ் முரளி என்ற அந்த நபர் டிக்கன்ஸ் ஸ்டீரிட்டில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.
அவரது தந்தை கே சண்முகமும் இளைய சகோதரர் எஸ் ராஜியும் ஏற்கனவே இன்று நண்பகல் ஜாலான் பட்டாணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
முரளியும் அவரது கும்பத்தினரும் பிகேஆர் சட்ட மன்ற உறுப்பினர்களான ஜேசன் ஒங், எஸ் ரவிந்தரன் ஆகியோருடன் பினாங்கு தலைமைப் போலீஸ் அதிகாரி அயூப் யாக்கோப்பை அவரது அலுவலகத்தில் இன்று மாலையில் சந்தித்தனர்.
முரளியின் குற்றச்சாட்டுக்கள் மீது உடனடியாக தீவிரமான விசாரணையைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை சுவாராமின் பினாங்குக் கிளை அயூப்-புக்கு சமர்பித்துள்ளது.
நேற்று ஒருவர் மற்றவருடைய பண்பாடுகளை சகித்துக் கொள்ளும் போக்கைப் பின்பற்றுவதற்காக மலேசியர்களை அயூப் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் பெரிதும் பாராட்டிப் பேசியிருந்தார்.
நபிகள் நாயகம் பிறந்த நாள், சாப் கோ மே, தைப்பூசம் ஆகிய மூன்று பெரிய நிகழ்வுகளும் எந்த விதமான இடையூறுமின்றி நல்ல முறையில் நடைபெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
அந்த மூன்று விழாக்களையும் ஒட்டி ஈராயிரம் போலீஸ்காரர்களை போலீஸ் பணியில் ஈடுபடுத்தியிருந்தது.
நான்கு கொள்ளைச் சம்பவங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் மூன்று சம்பவங்கள் தீர்க்கப்பட்டு விட்டதாக அயூப் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தைப்பூச நாளின் போது ஆயூப் ஆறு பாராங்கத்திகளையும் ஐந்து கத்திகளையும் போலீசார் கைப்பற்றியதாகவும் அவர் சொன்னார்.
“ஏற்பாட்டாளர்கள் மதுபான விற்பனையைத் தடை செய்தது நன்மையளித்தது எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் அதனால் வன்முறைச் சம்பவங்கள் போன்ற கடுமையான பிரச்னைகளுக்கு வழி வகுத்து விட்டன,” என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.