முஸ்லிம் அல்லாதார் தங்களுக்கு எதிரிகள் என்னும் தங்கள் எண்ணத்தை திருத்திக் கொள்ளுமாறு முஸ்லிம்களை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நோன்புப் பெருநாள் முஸ்லிம்களுக்கு உரித்தானது என்ற போதிலும் இஸ்லாம் தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடமிருந்து எதனை விரும்புகிறது என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”, தமது நோன்புப் பெருநாள் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அத்துடன் முஸ்லிம் அல்லாதவரை மருட்டலாகக் கருதும் முஸ்லிம்களின் தவறான எண்ணங்களையும் நாம் திருத்த வேண்டும். அத்தகைய எண்ணம் அனைவருக்கும் நீதியை வலியுறுத்தும் இஸ்லாமிய சிந்தனைகளுக்கு எதிர்மறையான தோற்றத்தை தந்து விடுகிறது.”
சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் அவர் சாடினார். முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதாக அண்மையில் வெளியான ஜோடிக்கப்பட்ட செய்திகள் பற்றியே காலித் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகும்.
“சமூகத்தை பிரிக்கும் எந்த முயற்சியும் பொறுப்பற்ற நடவடிக்கை”, என அவர் சொன்னார்.
புதன்கிழமை கொண்டாடப்படும் தேசிய நாளை ஒட்டி மக்கள் முதிர்ச்சியையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டும் என்றும் காலித் வலியுறுத்தினார்.
“நாடு சுதந்தரமடைந்து 54 ஆண்டுகள் நிறைந்து விட்டன. இந்த நாட்டின் வாழ்க்கையில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன. அந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முதிர்ச்சியும், பணிவன்பும், திறந்த போக்கும் அவசியமாகும்,” என்றார் அவர்.
கடந்த புதன்கிழமையன்று அரசாங்கத்துக்குச் சொந்தமான டிவி1 தொலைக்காட்சி நிலையம், ‘மலேசியா சிங்கப்பூரில் உள்ள முர்தாட் (சமய நம்பிக்கையற்றவர்கள்)’ என அழைக்கப்படும் பேஸ் புக் குழுவுடன் நாட்டின் மூத்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை இணைத்துக் கூறும் செய்தி ஒன்றை ஒளிபரப்பியது.
அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் டிஎபி தேசியப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவாவும் ஒருவர் ஆவார்.
அந்தச் செய்தி “தேசியத் தொலைக்காட்சியின் இனவெறி பிடித்த பொய்யான தகவல் என்றும் அது மிகவும் வெறுக்கத்தக்கது என்றும்” அவர் வருணித்தார்.
“முன் அனுமதி இல்லாமல் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அந்த பேஸ் புக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தத் தொலைக்காட்சி நிலையம் சமய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது,” என்றும் புவா குறிப்பிட்டார்.
அதற்கு ஒரு வாரம் முன்னதாக டியூசன் மையம் ஒன்றில் முஸ்லிம் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்படுவதாகக் கூறிக் கொண்டு அந்த மையத்துக்கு முன்பு அல்-முஸ்ரிக்கின் ( Al-Musyrikin ) சூராவைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிடும் தகவல் ஒன்றை அரசாங்கத்துடன் தொடர்புடைய டிவி 3 தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியது.
என்றாலும் அந்தத் தகவலை தொலைக்காட்சி நிலையம் ஜோடித்ததாக ஒர் அரசு சாரா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தான் மேற்கொண்ட விசாரணைகள் அத்தகைய சூராவ் ஒன்று இல்லை என்பதைக் காட்டியதாகவும் எந்த முஸ்லிமும் தங்கள் சூராவை ‘ Al-Musyrikin ‘ ( பல தெய்வ நம்பிக்கை கொண்டவர் ) என அழைக்க மாட்டார் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலாய வளாகத்தில் 12 முஸ்லிம்கள் கலந்து கொண்டிருந்த விருந்து ஒன்றில் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை அதிரடிச் சோதனைகளை நடத்திய பின்னர் மதம் மாற்றம் தொடர்பான பிரச்னை எழுந்தது.