மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையிலான சொற்போர் திட்டமிட்டவாறு நடைபெறும். அச்சொற்போர் அடுத்த பொதுத் தேர்தலும் சீனர்களின் அரசியல் எதிர்காலமும் குறித்ததாக இருக்கும்.
அந்த ஒரு மணி நேர சொற்போர் பெப்ரவரி 18 ஆம் தேதி மாலை மணி 5.00 க்கு பெர்ஜெயா டைம்ஸ் ஸ்கொயர் ஹோட்டலில் நடைபெறும். ஆங்கிலம் மற்றும் மெண்டரின் மொழிகளில் அச்சொற்போர் நடக்கும்.
“மிகவும் முக்கியமான சந்திப்பில் சீனர்கள் – இரு கட்சி முறை இரு இன முறையாக மாற்றம் காண்கிறதா?” என்பது அச்சொற்போருக்கான தலைப்பாகும்.
அரசியல் மாநாட்டின் ஓர் அங்கமான இச்சொற்போரை அஸ்லி ( Asian Strategy and Leadership Institute) மற்றும் மசீசவின் சிந்தனைக் குழாமான இன்சாப் (Institute of Strategic Analysis and Policy Research) ஆகிய அமைப்புகள் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன என்று மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது.
“மிகவும் முக்கியமான அரசியல் சந்திப்பில் மலேசிய சீனர்கள்” என்ற மாநாட்டை பிரதமர் நஜிப் ரசாக் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார். அதில் மசீச தலைவர்களும் கலந்துகொள்வர்.
லிம் குவான் எங்குடன் தாம் சொற்போரில் இறங்குவதை சொய் லெக் அவரது டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அச்சொற்போர் நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
“சொற்போரில் பங்கேற்ற ஒத்துக்கொண்டதற்காக லிம் குவாங் எங்கிற்கு நன்றி கூறுகிறேன்”, என்று மசீச தலைமையகத்தில் நடந்த கட்சியின் மத்தியக்குழு கூட்டத்திற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சொய் லெக் கூறினார்.