கடந்த ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் அவமதித்திருந்தது. அந்நூல் உடனடியாக பள்ளிகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என அரசு சார்பற்ற பல இந்திய அமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன என்பது யாவரும் அறிந்ததே.
அந்தவகையில் இண்டர்லோக் நாவல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளவில் பள்ளிகளில் இருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல அரசு சார்ப்பற் இந்திய அமைப்புகளை ஒன்றிணைத்து கடந்த ஆண்டு இண்டர்லோக் எதிர்ப்பு இயக்கமாக உருவாக்கப்பட்ட நியாட் எனப்படும் தேசிய இண்டர்லோக் செயற்குழு இன்று (11.02.2012) அதிகாப்பூர்வமாக கலைக்கப்பட்டது.
இன்று (11.02.2012) மதியம் 2 மணி முதல் பிரிக்பீல்டு கலா மண்டபத்தில் இடம்பெற்ற இண்டர்லோக் மீட்புக்கு நன்றி நவிலும் நிகழ்வில் நியாட் குழுவின் தலைவர் தஸ்லீம் முகமட் இப்ராஹிம், நியாட் இயக்கம் அதிகாரப்பூர்வமாக கலைப்படுவதாக அறிவித்தார்.
அத்துடன், தேசிய மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் குழு எனும் புதிய அரசு சார்ப்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பை தோற்றுவித்து இந்திய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைக்களுக்காக தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்த அவர், அப்போராட்டத்தில் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து கொள்ளும்படி அறைகூவல் விடுத்தார்.
இந்நிகழ்வின்போது இண்டர்லோக் மீட்பில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த தஸ்லீம், அவ்மீட்பு போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அரசுசார்பற்ற அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
இம்மலேசியத் திருநாட்டிற்கு 9ஆம் நுற்றாண்டில் ஆட்சியாளர்களாகவும் வணிகர்ளாகவும் பின்னர் நாட்டை மேம்படுத்துவதற்காகவும் வந்தவர்கள். இத்தகைய சிறப்புக்குரியவர்கள் நாம். ஆனால் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மற்றவர்கள் பயன்படுத்தி அவல நிலைக்கு ஆக்கப்பட்டிருக்கின்றோம்.
எனவே, இந்த நிலையிலிருந்து விடுபட்டு தன்மானமுள்ள சமுதாயமாக வாழவும் நம் எதிர்காலச் சந்ததியினர்களுக்கு நல்வழிகாட்டதலுக்கும் நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணையவேண்டும் என இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போராட்டவாதிகள் கேட்டுக்கொண்டனர்.
சுமார் மாலை மணி 6 அளவில் நிறைவுபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நூருல் இசா, சார்ல்ஸ் சந்தியாகோ, குலசேகரன், சிவநேசன், மனோகரன் மற்றும் முன்னாள் இந்து சங்கத் தலைவர் வைத்திலிங்கம், சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவர் கா. ஆறுமுகம், PAS துணைப் பொறுளாலர் சப்கி யூசப், PSM கட்சி துணைத் தலைவி சரஸ்வதி, DAP மகளிர் அணி தலைவி காமாட்சி, சட்டமன்ற உறுப்பினர் ரவி ஆகியோருடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டர்.