செபுத்தே எம்பி-யின் எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யும் முயற்சியில் உத்துசான் தோல்வி கண்டது

செபுத்தே எம்பி தெரெசா கோக், 2008ம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தெரிவித்த கருத்து மீது அவருக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடைய எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சமர்பித்த விண்ணப்பத்தில் தோல்வி கண்டது.

தாம் எதிர்வாதம் புரிவதற்கு போதுமான வழக்கை கோக் கொண்டிருப்பதால் அந்த வழக்கு முழு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என நீதிபதி டத்தோ ஜான் லூயிஸ் ஒ’ ஹாரா ஆணையிட்டார்.

“இது தள்ளுபடி செய்வதற்கு சாதாரணமான தெளிவான  வழக்கு அல்ல. அது முழு விசாரணைக்குச் செல்ல வேண்டும்”, என ஒ’ ஹாரா சொன்னார். கோக்கிற்கு செலவுத் தொகையாக அந்த நாளேடு 5,000 ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்துசான் மிலாயு, தனது உத்துசான் மலேசியா-மலாய் மொழி நாளேடு பற்றி அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, தெரெசா கோ சூ சிம் என்ற முழுப் பெயரைக் கொண்ட சிலாங்கூர் டிஏபி தலைவருமான 47 வயது கோக் மீது ரிட் சம்மன்ஸையும் கோரிக்கை அறிக்கையையும் வழங்கியது.

உத்துசான் மலேசியா தாம் தேசிய ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கைகளையும் 2008ம் ஆண்டு தாம் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த உணவு குறித்து தமது வலைப்பதிவில் எழுதியிருந்ததையும் திரித்து வெளியிட்டதாக கோக் கூறியதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கோக் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக உத்துசான் மிலாயு தனது கோரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உத்துசான் மிலாயு, இதர விஷயங்களுடன் அவதூறாதானது எனக் கூறப்படும் கட்டுரைகளும் வார்த்தைகளும் மேற்கோள்களும் அல்லது கருத்துக்களும் வலைப்பதிவிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனக் கோரியது.

அவதூறானவை எனக் கூறப்படும் வார்த்தைகளை கோக்-கோ, அவரது முகவர்களோ அல்லது ஊழியர்களோ மேலும் வெளியிடுவதிலிருந்து தடை செய்வதற்கான ஆணையையும் அது கோரியிருந்தது.

நீதிமன்றம் பொருத்தமானதாக கருதும் இழப்பீடுகளையும் செலவுத் தொகைகளையும் அது நாடியது.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உத்துசான் மிலாயு முறையீடு செய்யும் என அந்த வழக்கில் அதனைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா கூறினார்.

கோக் சார்பில் சங்கீத் கோர் ஆஜரானார்.