தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டியவர் அடுத்து பகாங் மந்திரி புசார் இல்லத்துக்குமுன் போராட்டத்தைத் தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறார்.
சிருவான் கெமிலாங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான கான் ஈ செங், திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவந்தார்.நேற்று அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். என்றாலும், போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால் தீக்குளிப்பில் ஈடுபடக்கூடும் என்பதை அவர் மறுபடியும் வலியுறுத்தினார்.
“ஏய்த்துப் பிழைக்கும் தலைவர்களை மலேசியர்கள் சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை பகாங் மக்களுக்கும் மற்ற மலேசியர்களுக்கும் உணர்த்த விரும்புகிறேன். அவர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் வேறுபாடில்லை.
“பகாங்கில் உள்ளதைப் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா?”, என்று அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சிலாங்கூர் பாடாங் கோத்த டமன்சாராவில் செய்தியாளர்களிடம் வினவினார்.
போராட்டம் நடத்திய இடத்தில் போலீசார் இருந்ததாலும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேட்டுக்கொண்டதன்பேரிலும் தற்கொலையை முயற்சியைத் தள்ளிவைத்ததாக கான் குறிப்பிட்டார்.
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பகாங் அரசு தம் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டிய ரிம63மில்லியனைக் கொடுக்காதவரை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கான் முதலில் அறிவித்திருந்தார்.
ஆனால், மருத்துவ உதவியாளர்கள் அவரின் இரத்த அழுத்தத்தைச் சோதனை செய்ய முயன்று அது முடியாமல் போகவே அவரை நேற்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குவாந்தானில் போராட்டம் தொடரும் என்று கான் சூளுரைத்தார். ஆனால், அங்கு அது ஒரு தனிமனிதர் நடத்தும் போராட்டமாக இருக்காது.