அரசாங்கக் கடன் அளவு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் இப்போது 65.2 விழுக்காடு, டோனி புவா

எம்பி பேசுகிறார்: கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2011-2012ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் படி நமது கூட்டரசு அரசாங்க கடன் 2011ம் ஆண்டு இறுதியில் 455.7 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

அந்த அளவு 2010ம் ஆண்டு அளவை விட 11.9 விழுக்காடு கூடுதலாகும். அண்மைய ஆண்டுகளாக நமது கடன் அளவு தொடர்ந்து கூடி வருகிறது. 2006ம் ஆண்டு அந்த அளவு 242 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. 2002ல் அது 146 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.

இன்றைய நிலையில் கூட்டரசு அரசாங்கக் கடன் மதிப்பு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 53.8 விழுக்காட்டு ஆகும். அது 2010ல் 53.1 விழுக்காடாகவும் 2006ல் 44.6 விழுக்காடாகவும் இருந்தது.

இதில் மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவெனில் “அரசாங்க வரவு செலவு அறிக்கைக்கு அப்பாற்பட்ட” நிதி அளிப்புக்கள் கூட்டரசு அரசாங்கக் கடன்களாக குறிக்கப்படாததாகும்.

அண்மைய ஆண்டுகளில் அரசாங்கம் தனது சார்பு நிறுவனங்கள் வழியாகவும் தொழில் கழகங்களாக மாற்றப்பட்ட அமைப்புக்கள் வழியாகவும் பல கடன் பத்திரங்களை அதிகமாக வெளியிட்டுள்ளதாகும்.

அந்தக் கடன்கள் அரசாங்கம் வழங்கிய உத்தரவாதத்துடன் பெறப்பட்டவை ஆகும். ஆனால் அவை கூட்டரசு அரசாங்கக் கடன்களில் பிரதிபலிக்கப்படவில்லை.

2010ம் ஆண்டு “அரசாங்க வரவு செலவு அறிக்கைக்கு அப்பாற்பட்ட” நிதி அளிப்புக்கள் 96.9 பில்லியன் ரிங்கிட்டை எட்டின. 2009ம் ஆண்டு இருந்த 84.3 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் அது 14.9 விழுக்காடு கூடுதலாகும்.

அந்தக் கடன்கள் அனைத்தும் அரசாங்க உத்தரவாதத்துடன் வாங்கப்பட்டுள்ளன. கடன் வாங்கிய அமைப்புக்கள் அதனை திருப்பிச் செலுத்த தவறினால் அரசாங்கமே அதனைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டுக்கு குறைந்த விலை வீடுகளை கட்டுவதற்காக கூட்டரசுப் பிரதேச அற நிறுவனம் ஊழியர் சேம நிதியிலிருந்து பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 300 மில்லியன் ரிங்கிட் கடனை திருப்பிச் செலுத்த அது தவறினால் அரசாங்கம் தலையிட்டு அந்த 300 மில்லியன் ரிங்கிட்டை ஊழியர் சேம நிதிக்குத் தர வேண்டியிருக்கும்.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழ்நிலை

அந்தக் கடன்களை அரசாங்கம் எடுக்க வில்லை என்றாலும் அவை உண்மையில் அரசாங்கக் கடன்களாகும். இல்லையென்றால் அவை தொகுக்கப்பட்ட கடன் சுமைகளாக கருதப்படும். (contingent liabilities)

நடப்புக் கடன் அளவான 455.7 பில்லியன் ரிங்கிட்-டுடன் 96.9 பில்லியன் ரிங்கிட்டையும் சேர்த்தால் வரி செலுத்தும் மலேசியர்கள் சுமக்க வேண்டிய மொத்த கடன் மதிப்பு 552.6 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

அந்த அளவு நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65.2 விழுக்காட்டைக் குறிக்கிறது. அது 1959ம் ஆண்டுக்கான கடன் (உள்நாட்டு) சட்டம், 1983ம் ஆண்டுக்கான அரசாங்க நிதி அளிப்புச் சட்டம் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள 55 விழுக்காடு கூட்டரசு அரசாங்க கடன் அளவைக் காட்டிலும்   அதிகமாகும்.

கிரீஸில் தொகுக்கப்பட்ட கடன் சுமைகளாக கருதப்படும் (contingent liabilities) அம்சங்கள் அதிகாரத்துவ அரசாங்கக் கடன்களில் பிரதிபலிக்கப்படவில்லை அல்லது நாட்டின் வரவு செலவுக் கணக்கில் அது காட்டப்படவில்லை. அதன் விளைவாக அந்த நாட்டில் நிதி நெருக்கடி உருவானது.

அரசாங்கம் முதலில் தனது அனைத்து உத்தரவாதங்களையும்  தொகுக்கப்பட்ட கடன் சுமைகளையும் தனது ஆண்டு பொருளாதார அறிக்கையில் குறிப்பிட வேண்டும். அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அதே வேளையில் மலேசியாவின் கடன் அளவு கூடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நமது பொதுத் துறை நிதிகளை சீரமைப்புச் செய்வதற்கு கிரீஸில் உருவான பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் வரையில் மலேசியா காத்திருக்கக் கூடாது. நமது கடன்கள் அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் நாம் நிதிப் பேரிடரை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

——————————————————————————–

டோனி புவா டிஏபி கட்சியின் தேசிய பிரச்சாரப் பிரிவுச் செயலாளரும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம் பி-யும் ஆவார்.