காலமான வாக்காளர் பெயர்கள் அண்மைய வாக்காளர் பட்டியலில் இல்லை

2011ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியல் அண்மையில் நாடு முழுவதும் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பெரிய வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட காலமான வாக்காளர்கள் பட்டியல் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் ஆத்திரமடைந்துள்ளன.

காலமான வாக்காளர் பட்டியல், புதிதாகப் பதிந்து கொண்ட வாக்காளர்கள், முகவரிகளை மாற்றிக் கொண்ட வாக்காளர்கள் குடியுரிமை ரத்துச் செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆகியோரது பட்டியல் எல்லா முன்னைய துணை வாக்காளர் பட்டியல்களில் இடம் பெற்றிருந்தன என்று ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவின் தேர்தல் குழுத் தலைவர் முகமட் பைசுல் முகமட் சாலே கூறினார்.

பொது மக்களுடைய பார்வைக்காக பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை 2011ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் காட்சிக்கு வைத்திருந்தது.

“ஆனால் இந்த முறை துணை வாக்காளர் பட்டியல் வழக்கத்துக்கு மாறாக உள்ளது. தகுதி மாறியுள்ள மற்ற வாக்காளர் பட்டியல்களுடன் காலமான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை,” பைசுல் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

முன்பு எப்போதும் நடந்திராத அந்தப் பழக்கம் தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிப்படையான போக்கிற்கு ஏற்ப இல்லை என்றும் அவர் சொன்னார்.

“தேர்தல் ஆணையம் எதனை மறைக்க முயலுகிறது ?” என பைசுல் வினவினார்.

காலமான வாக்காளர் பட்டியல் சேர்க்கப்படாததற்கான காரணத்தை அந்த ஆணையம் விளக்குவதோடு முழுப் பட்டியலையும் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“நான் திரங்கானு உட்பட மற்ற மாநிலங்களில் உள்ள சகாக்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்களும் அதே புகார்களைத் தெரிவித்தனர்,” என பைசுல் மலேசியாகினியிடம் கூறினார்.

பேராக் பிகேஆர், பினாங்கு டிஏபி ஆகியவற்றின் தேர்தல் பிரிவுகளுடன் தொடர்பு கொண்ட போது அதே பிரச்னைகளை அந்த இரண்டு மாநிலங்களும் எதிர்நோக்குவது தெரிய வந்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் 2011ம் ஆண்டு நான்காவது காலாண்டுக்கான துணை வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் இணைத்துக் கொள்ளக் கூடிய சாத்தியம் நிறைய உள்ளது.

காலமான வாக்காளர் பட்டியல் துணை வாக்காளர் பட்டியலுடன் இல்லை என்பதை மலேசியாகினி தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளது. அந்த ஆணையத்தின் அதிகாரத்துவப் பதிலுக்காக அது காத்திருக்கிறது.

வாக்காளர் பட்டியலிலிருந்து காலமான வாக்காளர் பெயர்களை உடனடியாக நீக்கி விடலாம் என நேற்று உள்துறை அமைச்சு கூறியது.

தேசியப் பதிவுத் துறைக்கும் மற்ற அமைப்புக்களுக்கும் இடையில் உள்ள இணையத் தொடர்புகள் மூலம் அதனைச் செய்து விட முடியும் என அமைச்சின் தலைமைச் செயலாளர் மாஹ்முட் அடாம் கூறினார்.

இதனிடையே நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லோக் அந்தப் பிரச்னை குறித்து தேர்தல் ஆணையச் செயலாளர் கமாருடின் பாடியா-விடம் தெரிவித்துள்ளார். அந்தப் பட்டியலை வழங்குவதற்கு சட்ட ரீதியிலான கடப்பாடு ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என அப்போது  கமாருடின், லோக்-கிடம் கூறியிருக்கிறார்.

“எனக்கு அந்தப் பட்டியல் வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதுமாறும் பின்னர் அந்தப் பட்டியலை அனுப்புவதாகவும் கமாருடின் சொன்னார்,” என லோக் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்தப் பதில் மீது மகிழ்ச்சி அடையாத அந்த ராசா எம்பி, தாம் அந்த விஷயத்தை தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் எழுப்பப் போவதாக கூறினார்.