கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை மதம் மாற்றுவது தொடர்பில் ஹசான் அலி கூறியுள்ளது “குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், எதையும் எளிதில் நம்பிவிடுவோரை அது வெகுவாக ஆத்திரம் கொள்ளவும் வைக்கும்” என்று வருணித்துள்ளார் கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங்.
“மக்கள் அவ்வளவு எளிதில் அதை நம்பி விட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், அவரது பேச்சு மக்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும்.ஆனால் சில விசயங்களைக் கிறிஸ்துவ பிரச்சாரகர்களுடன் அவர் தொடர்புப்படுத்துவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது”, என்று மலாக்கா-ஜோகூர் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயத் தலைவரான டாக்டர் பால் கூறினார்.
“அவரது பேச்சில் உள்ள உணர்ச்சிவசப்பட வைக்கும் விசயங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த மனிதர்மீது வெறுப்பு வராது, சிரிப்புத்தான் வரும்”, என்றாரவர்.
ஆனால்,சமயம் என்பது சிரிப்புக்குரிதல்ல என்று குறிப்பிட்ட ஆயர் டான், சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவோர்மீது பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் ஹசானைத் தடுக்க முனையாதது ஏன் என்பது தமக்குப் புரியவில்லை என்றார்.
“மிதவாதம் பற்றிப் பேசுவோர் அதை அப்பட்டமான முறையில் மீறும் ஹசான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் ஆட்சிக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஹசான், கிறிஸ்துவ சமயப்பரப்புக் குழுவினர், முஸ்லிம்கள்களை மதம் மாற்றும் நோக்கத்தில் முஸ்லிம்கள்போல் உடை தரித்து பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.
மதம் மாறிய 51 முஸ்லிம்கள், தங்களுக்குத் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) செய்விக்கப்பட்டது பற்றியும் புனித நீர் அருந்தியது பற்றியும் தம்மிடம் தெரிவித்ததாகவும் ஹசான் கூறினார்.
“இந்த அபாண்டங்களுக்கு சுருக்கமாக விடை அளித்து விடலாம். கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் சமயப் பரப்பும் நடவடிக்கைகளுக்கு மாறுவேடத்தில் செல்ல முடியாது. மேலும், புனித நீர், திருமுழுக்கின்போது தெளிக்கப்படுவது, அருந்தப்படுவதல்ல”, என்று ஆயர் டான் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களை மதம் மாற்றுவதாக ஹசான் கூறுவது “அடிப்படையற்ற குற்றச்சாட்டாகவும் குத்தல் பேச்சாகவும்தான்” தெரிகிறது என்று மலேசிய, சிங்கப்பூர், புருணை கத்தோலிக்க ஆயர்கள் திருச்சபையின் தலைவருமான அவர் கூறினார்.
“எந்தவொரு ஆதாரத்தையும் காண்பிக்காமல் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை மறுப்பது கடினம். ஆனால், கிறிஸ்துவர்கள் மெளனமாக இருப்பதை வைத்து அவர்கள் குற்றச்சாட்டை உதாசீனப்படுத்துவதாகவோ ஏற்றுக்கொள்வதாகவோ அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது”,என்று பேராயர் டான் சொன்னார்.