அட்னான்:நஜிப்-அன்வார் விவாதம் தேவை என்று சொல்லவில்லை

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றுக் கட்சிகளுடன் பொதுவிவாதங்களில் ஈடுபட பிஎன் தயார் என்று தாம் கூறியதை வைத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கிடையில் விவாதம் நடப்பதை வரவேற்பதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது என்று விளக்கமளித்துள்ளார்.

“அது, பிரதமருக்கும் அன்வாருக்குமிடையில் ஒரு விவாதம் நடப்பதை நான் ஆதரிப்பதாகவோ விரும்புவதாகவோ பொருள்படாது.பிரதமர் அன்வாருடன் வெற்று விவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதை நாம் விரும்பவில்லை.அவருக்கு முக்கிய வேலைகள் பல உண்டு”, என்று தெங்கு அட்னான் கூறியதாக இன்றைய சினார் ஹரியான் அறிவித்துள்ளது.

“வாதமிட நாங்கள் தயார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.ஆனால், எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம் என்பது முக்கியம்.துணைப் பிரதமர் இருக்கிறார், அம்னோ உதவித் தலைவர்கள், உச்சமன்ற உறுப்பினர்கள், இளைஞர் தலைவர், மகளிர் தலைவி எல்லாரும் இருக்கிறார்கள்.அவர்களாலும் மாற்றரசுக் கட்சியினருடன் வாதத்தில் ஈடுபட முடியும்”, என்றவர் கூறியதாக மலாய் மெயில் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை ஆங்கில நாளேடான த ஸ்டார், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையில் நடந்ததைப் போன்ற பொதுவிவாதங்கள் “ஆரோக்கியமானவை” என்றும் அவற்றில் கலந்துகொள்ள ஆளும் கட்சி என்றும் தயாராகவே உள்ளது என்றும் தெங்கு அட்னான் கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், நஜிப்புக்கும் அன்வாருக்குமிடையில் ஒரு விவாதம் வேண்டும் என்றும் அதற்கு தெங்கு அட்னான்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சரவாக்கில் டிஏபி சவாலை எஸ்யுபிபி ஏற்றது

இதனிடையே,சரவாக்கில் எஸ்யுபிபி தலைவர் பீட்டர் சின்,பொது விவாதத்துக்கு வருமாறு டிஏபியின் பியாசாவ் சட்டமன்ற உறுப்பினர் லிங் சை கியோங் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டதாக சரவாக் செய்தித்தாளான யுனைடெட் டெய்லி அறிவித்துள்ளது.

விவாதத்துக்கான தலைப்பு, ஏற்பாட்டாளர்கள் யார் முதலிய விவரங்களைக் குறிப்பிட்டு லிங் தமக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று பீட்டர் சின் கேட்டுக்கொண்டார்.

பொதுவிவாதத்தில் தாம் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய எரிபொருள், பச்சைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சருமான சின், பிஎன் எந்தத் தலைவரையும் அனுப்பி வைக்கலாம் என்றார்.

அரசியலில் ஒரு புதுமுகமும் கடந்த ஆண்டு மாநில தேர்தலில் துணை முதலமைச்சர் ஜோர்ஜ் சானைத் தோற்கடித்தவருமான லிங், வியாழக்கிழமை சின்னுக்குக் கடிதம் அனுப்பப்போவதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

விவாதத்தை “டிஏபியா, எஸ்யுபிபியா-எது சிறந்த கட்சி?”-என்ற தலைப்பில் நடத்தலாம் என்று அவர் முன்மொழிந்தார்.

“டிஏபியால் மேம்பாட்டைக் கொண்டுவர இயலாது என்று கூறி சின் கிராமத்து மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணி வருகிறார்.அதனால் அது பற்றியே வாதமிட வருமாறு நான் சவால் விடுக்கிறேன்”, என்று லிங் கூறினார்.

TAGS: