டிபிகேஎல்: பொதுப்பணம் அமைச்சர் நிகழ்வுக்குச் செலவிடப்படவில்லை

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம்(டிபிகேஎல்), குடியிருப்பாளர் சங்கங்களுக்கு(ஆர்ஏ) ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தியதில்லை.

இதனை, நேற்று மலேசியாகினிக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் வலியுறுத்திய டிபிகேஎல்,லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்(வலம்) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் “உண்மையில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

டிபிகேஎல், பதிவுபெற்ற குடியிருப்பாளர் சங்கங்களுக்கு அவற்றின் சமூக நடவடிக்கைகளுக்கு உதவியாக ஆண்டுக்கு ரிம5,000மான்யம் வழங்குகிறது.

இது போக, அவற்றின் நடவடிக்கைகளுக்கு “முடிந்தால்” தளவாடங்களையும் உணவுப்பொருள்களையும் கொடுத்து உதவுவதுண்டு என்று டிபிகேஎல் கூறிற்று.

என்ஜிஓ-களும் டிபிகேஎல்லும் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகள் சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டவை. 

அந்நிகழ்வுகளில் ஏற்பாட்டாளர்களின் அழைப்பின்பேரில் ராஜா நொங் சிக்(இடம்) கலந்துகொள்வதுண்டு.

“அமைச்சர் என்ற முறையில்தான் அவற்றில் அவர் கலந்துகொள்கிறாரே தவிர அரசியல் நோக்கத்துடன் அல்ல”,என்று அந்த அறிக்கை விளக்கமளித்தது.

ஆர்ஏ-க்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்குச் செலவிடப்படுவதால் தங்களுக்கு உதவி கிடைப்பதில்லை என்று தம் தொகுதி மக்கள்  புகார் செய்திருப்பதாக நுருல் இஸ்ஸா கடந்த வெள்ளிக்கிழமை கவனப்படுத்தி இருந்தார்.

அவர் சொன்னதை புத்ரா ரியா அடுக்குமாடி குடியிருப்பாளர் சங்க செயல்குழு உறுப்பினர் அப்ட் ரகிம் முகம்மட் நூரும் உறுதிப்படுத்தினார். கடந்த ஏப்ரலில் தீவிபத்துத் தடுப்பு இயக்கமொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் தங்களுக்கு உதவ பணம் இல்லை என்று டிபிகேஎல் கைவிரித்ததால் அதை ரத்துச் செய்ய வேண்டியதாயிற்று என்றாரவர்.

கடந்த ஆண்டில் பொருளாகக் கொடுத்துதவும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரிம10,000, வேறு இரண்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு விட்டதாக டிபிகேஎல்-இல் ஆர்ஏ விவகாரங்களைக் கவனிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அப்ட் ரகிம் கூறினார். அதில் ஒரு நிகழ்வை அங்குள்ள அம்னோ கிளை ஏற்பாடு செய்திருந்தது.அதில் ராஜா நொங் சிக்கும் கலந்துகொண்டார்.

TAGS: