போலி நோட்டீஸ் “நஜிப்பின் மலாக்கா பயணத்தைச் சீர்குலைக்கும் முயற்சி”

வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலாக்காவுக்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொள்வதை ஒட்டி இரண்டு நாட்களுக்கு தங்களது வியாபாரத்தை மூடுமாறு உள்ளூர் அங்காடிக் கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டு மலாக்கா மேயர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று இணையத்தில் பரவலமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அத்தகைய ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என மலாக்கா ஆட்சி மன்ற உறுப்பினர் கான் தியான் லூ கூறினார். அந்த வரலாற்றுப்பூர்வ நகரத்துக்கு நஜிப் மேற்கொள்ளும் வருகையைச் சீர்குலைப்பது அதன் நோக்கம் எனத் தாம் ஐயம் கொள்வதாக அவர் சொன்னார்.

மலாக்கா மாநகராட்சி மன்றத்தின் அதிகாரத்துவ தாளில்  வெளியிடப்பட்ட அந்த நோட்டீஸ், நஜிப் வெள்ளிக் கிழமை அதிகாரத்துவ வருகையை மேற்கொள்வதாகவும் மக்கள் விழாவை ஒட்டி வியாழக் கிழமை காலை 7 மணி முதல் வெள்ளிக் கிழமை இரவு எட்டு மணி வரை ஜாலான் ஆ கீ மூடப்படும் என்றும் கூறியது.

“அந்த நிகழ்வின் தொடர்பில் ஜாலான் ஆ கீ-யில் வியாபாரம் செய்யும்  எந்த வித இடையூறுமின்றி அந்த இடத்தைத் தயார் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக அனைத்து அங்காடிக் கடைக்காரர்களும் தற்காலிகமாக பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் தங்களது வியாபாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த நோட்டீஸின் வாசகம் குறிப்பிட்டது.

அந்த நோட்டீஸை மாநகராட்சி மன்றம் வெளியிட்டதாகக் கூறப்படுவதை கான் மறுத்தார்.

“நாங்கள் இன்று காலை மன்றத்துடன் தொடர்பு கொண்டு சோதனை செய்தோம். அத்தகைய உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்தோம்,” என கான் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

“வியாபாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அங்காடிக் கடைக்காரர்களுக்கு அத்தகைய உத்தரவை வெளியிடுவதற்கு மலாக்கா நகராட்சி மன்றம் ஒன்றும் முட்டாள் இல்லை. காரணம் அத்தகைய உத்தரவு நியாயமற்றது,” என மசீச டுயோங் சட்ட மன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

“மேயருக்கு அந்த நோட்டீஸ் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே அந்த நோட்டீஸ் ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும்.”

“அந்த வருகையை சீர்குலைக்கும் முயற்சியே அது என நான் சந்தேகிக்கிறேன்.”

TAGS: