FGVH-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை கிளந்தான் தடுக்கும்

கிளந்தான் மாநிலத்தில் உள்ள 55,500 ஏக்கர் நிலத்தை பெல்டா தோட்ட நிறுவனம் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு வழக்குரைஞர் குழு ஒன்றை மாநில அரசாங்கம் நியமிக்கும்.

அந்தத் தகவலை இன்று பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா வெளியிட்டார்.

வரும் மே மாதம் புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படவிருக்கும் FGVH என்ற Felda Global Ventures Holdings நிறுவனத்திடம் நில உரிமையை வழங்கும் எந்த உடன்பாட்டிலும் மாநில அரசாங்கம் கையெழுத்திடாது என அவர் கூறினார்.

“அந்த நில கையகப்படுத்தும் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் பற்றித் தெளிவாக தெரியவில்லை என்றாலும் மாநில அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளாது. அத்துடன் அது 1960ம் ஆண்டுக்கான குழு குடியேற்றச் சட்டத்தை மீறுகிறது.”

“அந்தக் குழுமக் குடியேற்றச் சட்டத்தின் கீழ் பெல்டா தோட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் நில உரிமை குடியேற்றக்காரர்களுக்கும் குடியேற்றக்காரர் கூட்டுறவுக் கழகங்களுக்கும் மட்டுமே செல்லுபடியாகும் என்பது அதன் அர்த்தமாகும்,” என்று ஹுசாம் விடுத்த அறிக்கை கூறியது.

TAGS: