FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நெகிரி செம்பிலானில் உள்ள பாலோங் 4, 5, 6 ஆகியவற்றைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடியேற்றக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
‘Umno-BN penipu’, ‘Felda penipu’, ‘Umno-BN died and RIP’, ‘Hidup Keadilan’ and ‘Lawan tetap lawan’ என்னும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த துணியாலான நீண்ட பதாதையில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
நேற்றிரவு பாலோங் பெல்டா நிலக் குடியேற்றத் திட்டத்துக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் வருகை அளித்த போது துணை நிகழ்வாக அது நடத்தப்பட்டது.
FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படும் யோசனையை ஆட்சேபிக்கும் பொருட்டு பிகேஆர் கட்சியின் பெல்டா, ஒராங் அஸ்லிப் பிரிவு மேற்கொள்ளும் 100,000 கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தையும் வான் அஜீஸா அப்போது தொடக்கி வைத்தார்.
மே மாதம் 10ம் தேதி FGVH-ஐ பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ம்கோலாலம்பூரில் மார்ச் 29ம் தேதியும் புத்ரா ஜெயாவில் இன்னொரு பேரணியையும் நடத்த அந்தப் பிரிவு திட்டமிட்டுள்ளது.
“நாங்கள் சுல்தான் சுலைமான் கிளப் நிர்வாகத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டுள்ளோம். அதன் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அங்கு நாங்கள் எல்லாக் கையெழுத்துக்களையும் கொண்ட பதாதைகளையும் இணைத்துக் காட்சிக்கு வைப்போம்.”
மார்ச் 30ம் தேதி நாங்கள் புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு பெரிய அளவில் பேரணி நடத்தவும் தயாராகி வருகிறோம்,” என அந்தப் பிரிவின் தலைவர் சுஹாய்மி சைட் கூறினார்.