இண்டர்லோக் நாவலை மலேசியப் பாட திட்டத்திலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீதான வழக்கை மீட்க, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் குறிப்பாணையை (memorandum) மலேசியா மனித உரிமை கழகத்திடம் (SUHAKAM) ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் வழங்குவர் என்று அதன் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மணிமாறன் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர்களை கேவலமாக அவமதித்து, அவர்களின் தன்மானத்தை துச்சமாக கருதி, இளம் மாணவ நெஞ்சங்களில் கொடூரமான இனவாத தன்மைகளை தூவும் நோக்கில், உயர் நிலை ஐந்தாம் படிவ கட்டாய மலாய் இலக்கிய நூலாக கடந்த ஆண்டு அறிமுகபடுத்தப்பட்ட இண்டர்லோக் நாவலை எதிர்த்து ஹிண்ட்ராப் மக்கள் சக்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியது நாடறிந்த செய்தி.
அந்த வகையில் இந்த நாவலை பாட திட்டத்திலிருந்து அகற்ற அரசாங்கத்தை வலியுறுத்த மக்களிடேயே விழிப்புணர்வை தூண்டும் வகையில் இண்டர்லோக் எதிர்ப்பு வாகன ஊர்வலத்தை ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களில் ஏற்பாடு செய்திருந்தது.
மிகவும் வெற்றிகரமான இந்த ஊர்வலத்தின் போது இடையில் வழிமறித்த காவல்துறையினர் தகுந்த காரணங்களை காட்டாமல் நெகரி செம்பிலானில் 22 பேரையும், சிலாங்கூரில் 5 பேரையும், கோலாலம்பூரில் 21 பேரையும் பேராக்கில் 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த 54 பேர் மீதும் குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்து தற்சமயம் நாடாளுமன்றத்தில் வழக்காடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இண்டர்லோக் நாவல் பாடத்திட்டதிலிருந்து மீட்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. அரசாங்கத்தின் இந்த முடிவு இண்டர்லோக் நாவல் மீட்கப்பட வேண்டும் என மக்கள் போராடியது நியாமான ஒரு செயலே என்பதை நிரூபிக்கிறது. நியாயமான ஒரு காரியத்திற்காக போராடியது எவ்வகையில் குற்றமாகும் என வினவுகிறார் திரு மணிமாறன்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படலாகாது என்ற நியாயத்தின் அடிப்படையில், ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் 54 போராட்டவாதிகளின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்றும், அடிபடையற்றவைகள் என்றும் அரசாங்கத்தை மலேசிய மனித உரிமை கழகம் வலியுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்ய ஆவண செய்ய வேண்டும் என்ற குறிப்பாணையை பிப்ரவரி 27 -ஆம் தேதி காலை 11 .00 மணிக்கு கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், மெனாரா TH பெர்டானா, 13 ஆவது மாடியில் அமைத்திருக்கும் பணிமனையில் அதன் ஆணையரிடம் ஒப்படைக்கப்படும் என்ற திரு மணிமாறன், சமுதாயத்தின் தன்மானத்திற்காக கைதாகி வழக்கை எதிர்நோக்கும் இப்போரட்டவாதிகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் நல் உள்ளங்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.