கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிங்கப்பூர் மாற்றரசுக் கட்சி அரசியல்வாதி,யாவ் ச்சின் லியோங், தாம் நாடாளுமன்ற எம்பி பதவியை இழந்துவிட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
உழைப்பாளர் கட்சி தம்மைப் பதவிநீக்கம் செய்திருப்பதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று யாவ் நாடாளுமன்ற அவைத் தலைவர் மைக்கல் பால்மருக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக அவைத்தலைவர் அலுவலகம் நேற்று அறிவித்தது.
அந்நாட்டு அரசமைப்புப்படி கட்சியிலிருந்து விலக்கப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார்.
யாவ், மாற்றரசுக் கட்சியின் கோட்டையாக விளங்கும் ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், கடந்த வாரம் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.அவருக்கும் திருமணமான சக கட்சி உறுப்பினருக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாக வதந்திகள் உலவின. யாவ் அதன் தொடர்பில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருந்தார்.அவரது மெளனமே அவருக்கு எதிரியாயிற்று. கட்சிநீக்கம் செய்யப்பட்ட முதல் எம்பியாக அவர் விளங்குகிறார்.
அவர் கட்சி நீக்கம் செய்யப்பட்டதை உழைப்பாளர் கட்சி அவைத்தலைவருக்குத் தெரிவித்ததும், அவைத்தலைவர் அம்முடிவை எதிர்க்க அல்லது ஏற்க ஒருவாரம் அவகாசம் வழங்கினார்.
நாளைக்குள் யாவ் தம் முடிவைத் தெரிவித்தாக வேண்டும் என்றிருந்த நிலையில், நேற்று அவர் தம் முடிவை அவைத்தலைவருக்கு மின்னஞ்சல்வழி தெரிவித்து விட்டார்.
யாவ் இப்போது எங்குள்ளார் என்பது தெரியவில்லை ஆனால், அவர் பிப்ரவரி 15-இலேயே வெளிநாடு சென்றுவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
– dpa