புரோட்டோன்மீது கஜானா நேசனல் பெர்ஹாட்டுக்குள்ள உரிமையை டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட்டுக்கு மாற்றிவிடும் நடவடிக்கை மார்ச் மாதம் நிறைவுபெறும் என்று தேசிய கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார். அதற்குள் அதன் புதிய தலைமைத்துவமும் இறுதிசெய்யப்படும் என்றாரவர்.
இப்போதைக்கு புதிய தலைமைத்துவம் குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை என முன்னாள் பிரதமருமான மகாதிர் கூறினார்.
“உரிமை மாற்றம் மார்ச்சுக்குள் செய்து முடிக்கப்படும் என்று நினைக்கிறேன்”, என்று கோலாலம்பூரில் ஒஎஸ்வி உரிமையாளர் சங்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
புரோட்டோனின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி தெங்கு மஹாலீல் தெங்கு அரிப்-பே புதிய நிறுவனத்திலும் தலைவராக இருப்பாரா என்று அவரிடம் வினவப்பட்டது.
அதற்கு மகாதீர்,“அவரைத் தொடர்ந்து வைத்திருப்பதா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய இயலாது.புதிய உரிமையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்றார்.
கஜானா புரோட்டனில் தனக்கிருந்த 42.7விழுக்காட்டுப் பங்குரிமையை டிஆர்பி-ஹைகோம்-இடம் விற்பனை செய்துள்ளது.அந்நிறுவனத்துக்கு மூலதன வலுவும் வாகனத் தயாரிப்பில் நிறைய அனுபவமும் இருப்பதால் அவ்வாறு செய்ததாக கஜானா கூறிற்று.
-பெர்னாமா