காலித் இப்ராஹிம்: பக்காத்தான் மந்திரி புசார்களும் முதலமைச்சர்களும் ஏன் அழைக்கப்படவில்லை ?

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூட்டத்தில் பக்காத்தான் மாநிலங்களின் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கோரியுள்ளார்.

பக்காத்தான் முதலமைச்சரும் மந்திரி புசார்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுவதை மறுத்த அவர், தாங்கள் முதலாவதாக அழைக்கப்படவே இல்லை என்றார்.

நஜிப் தலைமை தாங்கிய அந்தக் கூட்டம் உண்மையில் பிஎன் மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூட்டமாகத் தான் திகழ்ந்தது என்றும் காலித் சொன்னார்.

“சிலாங்கூர், பினாங்கு, கெடா, கிளந்தான் ஆகியவை மலேசியப் பொருளாதார உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியை வழங்கும் வேளையில் மக்கள் விவகாரங்களை விவாதிக்கும் ஒரு கூட்டத்துக்கு  பக்காத்தான்  முதலமைச்சர், மந்திரி புசார்கள் ஆகியோரது பங்கை பிரதமர் ஒதுக்கியிருப்பது மிகவும் நேர்மையற்றதாகும்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

அது, ஒரே மலேசியா கோட்பாடு இன்னொரு அரசியல் மாயாஜாலம் என்பதையும் நிரூபிப்பதாகவும் காலித் குறிப்பிட்டார்.