மஇகாவின் வெற்று அறிக்கை பிரச்னைகளைத் தீர்க்காது, சேவியர் ஜெயக்குமார்

மஇகாவும் அதன் இளைஞர் பகுதியும் இந்திய சமூகத்திற்கு சேவையாற்றக்கூடிய பொறுப்புமிக்க இயக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் போலித்தனத்தால் மக்கள் இழந்தது அதிகம். அதனைப் பட்டியலிட விரும்பவில்லை. ஆலயத்தையோ, தமிழ்ப்பள்ளிகளையோ எங்கள் அரசியல் வாழ்வுக்கு நாங்கள் பயன்படுத்தியதும் இல்லை, அப்படிச் செய்ய நோக்கம் கொண்டதுமில்லை. மஇகாவின் இளைஞர் பகுதி செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சிவராஜ் என்பவரின் அறிக்கை அருவருப்புக்குடையதாக உள்ளது.

இந்தச் சமூகத்தின் அவலத்தில், இன்னலில் சுகங்கானும் இதுபோன்ற பேர்வழிகள் பொதுவாழ்விலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆலயத்தை தற்காக்க அப்பகுதி வாக்காளர்களும், பக்தர்களும் திரண்டு நின்று போராடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வருகைப்புரிந்த அத்தொகுதி பாரிசானின் சட்டமன்ற உறுப்பினரான மார்சோம், கோவிலை தற்காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததை மக்கள் கவனிக்காமலில்லை. மேலும் இத்தொகுதியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பாரிசானை சார்ந்தவர்களே இருப்பதால் இந்த ஆலயப் பாதுகாப்புக்கு அவர்கள்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆக, ஆட்சி மாறி விட்டதால் பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்காளர்கள் மீது எந்த கடப்பாடுமில்லையா? ஆகையால் பாரிசான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு இனி எந்தச் சேவையும் வழங்கமாட்டார்கள் என்று  சொல்லமுடியுமா?

இந்த ஆலயத்திற்கு ஆதரவாக வழங்கிய ஒரு கடித்தத்தை இத்தொகுதியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களால்  காட்டமுடியுமா? ஏன் அவர்கள்  வழங்கவில்லை? அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத்  தீர்மானம் நிறைவேற்ற உங்களுக்கு துணிச்சல் உண்டா?

பாரிசானின் பிள்ளையைக் கிள்ளிவிட்டு, தொட்டிலையாட்டும் கலாச்சாரத்தை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்பதால் இனியும் உங்கள் நரித்தந்திரங்கள் இந்தியர்களிடம் எடுப்படாது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கோவிலுக்கும், பக்தர்களுக்கும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசார் கோவிலை உடைப்பதற்கு மேம்பாட்டாளர்களுக்குத்  துணை நின்றது ஏன்?  போலீஸ் படை, முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவது நாடறிந்த உண்மை. ஆக, சிலைகளை அகற்றிய பின் கோவிலை உடைக்கவிருந்த மேம்பாட்டாளரின்  முயற்சியைத் தடுத்த எங்களைச் சாடுவதை விடுத்து, கோவிலுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கத் தவறிய போலீசாரின் நடவடிக்கையைக் கண்டிக்க ஏன் உங்களுக்கு துணிவில்லை?

போலீசாரல் இச்சமுதாயத்திற்கும், அந்த ஆலயத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கும் மன்னிப்பு கேட்கப் போலீசாரை வற்புறுத்த உங்கள் மஇகா அமைச்சர்களால் முடியுமா? சுய அரசியல் வாழ்வுக்காக, அம்னோவின் அராஜகங்களுக்குத் துணை போகும்  மஇகாவின் கபட நாடகத்தை  மூட்டை கட்டிவைத்து விட்டு இச்சமூகத்தின் மேன்மைக்குப் பாடுப்பட முன்வாருங்கள்.

மஇகாவும் அம்னோவும் பொறுப்பான அரசியல் இயக்கமாகச் செயல் பட வேண்டும். பத்திரிக்கைகளில் படமும், வெற்று அறிக்கையும் விடுவதால் மக்கள் பிரச்சனைகள் தீராது.

TAGS: