-ஜைட் இப்ராஹிம்
இது தேர்தல் ஆண்டு. ஆகவே சர்ச்சைக்குரிய எதனையும் பேசுவதற்கோ செய்வதற்கோ இது தருணம் அல்ல.
ஆனால் பெல்டா தலைவர் ஈசா சாமாட்டும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லானும் அவ்வாறு எண்ணுவதாகத் தெரியவில்லை. பெல்டாவை அதன் துணை நிறுவனமான Felda Global Ventures Holdings Sdn Bhd வழியாக புர்சா மலேசியா பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதில் அவர்கள் இருவரும் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர்.
பெல்டா குடியேற்றக்காரர்கள் மற்றும் அவர்களது கூட்டுறவுக் கழகமான Koperasi Permodalan Felda (KPF)ஆகியவற்றின் உண்மையான விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை அவர்கள் தொடருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
KPF-க்குப் பதில் சிறப்பு நிறுவனம் ஒன்றை அமைத்ததின் வழி தாங்கள் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டிருப்பதாக ஈசா அண்ட் கோ நினைக்கிறது.
அவர்களது நடவடிக்கை மற்ற அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது: “குடியேற்றக்காரர்கள் நலன்களையும் அவர்களது கூட்டுறவுக் கழகத்தையும் கவனிப்பதற்காக அமைக்கப்பட்ட வாரியமாக இப்போது இயங்கவில்லை. மாறாக மாபெரும் அம்னோ தோட்ட நிறுவனமாக செயல்படுகிறது.”
ஈசா சொல்ல வருவது இது தான்: “அம்னோ தனது தோட்ட நிறுவனத்தை பங்குப் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து தடுப்பதற்கு KPF-ல் உள்ளவர்களும் குடியேற்றக்காரர்களும் யார் ?”
நான் இதனைக் குறிப்பிடுவதற்காக வருந்துகிறேன்: ” பெல்டா அம்னோ அமைப்பு அல்ல. மாறாக சில கட்சித் தலைவர்களுக்காக நடத்தப்படும் அரசாங்க அமைப்பாகும்.”
பட்டியலில் சேர்ப்பதற்கு மகாதீர் சொல்லும் வாதம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எப்போதும் அவர்களுடைய தலைமைப் பேச்சாளராக பணியாற்றி வருகிறார். தோட்டங்களை மேம்படுத்துவதற்கு போதுமான பணம் அந்தக் குடியேற்றக்காரர்களிடம் இல்லை என அவர் நியாயப்படுத்த முயலுகிறார். பட்டியலில் சேர்க்கப்படா விட்டால் அவர்களுடைய எதிர்காலம் இருட்டாகி விடும் என்பதே அவர் சொல்வதின் அர்த்தம்.
குடியேற்றக்காரர்களிடம் நிதி வளங்கள் இல்லை எனச் சொல்வது உண்மை தான். ஆனால் தங்களுக்கு சொந்தமில்லாத ஒரு வர்த்தகத்தை அவர்கள் ஏன் விரிவுபடுத்துவது பற்றிக் கவலைப்பட வேண்டும் ?
1990ம் ஆண்டுக்குப் பின்னர் பெல்டாவுக்கு மாநில அரசுகள் வழங்கிய நிலம் அனைத்தும் தொடக்க நோக்கமான குடியேற்றக்காரர்களைச் சென்றடையவில்லை. காரணம் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் கொண்ட குடியேற்றத் திட்டங்கள் அப்போது நிறுத்தப்பட்டு விட்டன.
எடுத்துக்காட்டுக்கு சபாவில் உள்ள 300,000 ஏக்கர் பெல்டா நிலம் குடியேற்றக்காரர்களிடம் இல்லை. மாறாக மாநில அரசு வசம் உள்ளது.
இன்று பெல்டா கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஏக்கர் நிலத்தை தன் கட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் அதனை அம்னோ நிர்வாகம் செய்கிறது.
பங்குப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் பெல்டா சொத்துக்களை ‘விற்க முடியும்’. அதன் வழி அதிகமான சாரத்தை பிழிய முடியும்.
அது பட்டியலில் சேர்க்கப்படாமல் பாரிசான் நேசனல் பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் எல்லா செல்வமும் புதிய அரசாங்கத்திடம் போய் விடும். ஏன் அந்த ஆபத்தை எதிர்கொள்ள வேண்டும் ?
பட்டியலில் சேர்க்கப்படும் நடவடிக்கையை குடியேற்றக்காரர்கள் அங்கீகரித்து ஆதரிக்க வேண்டும் என அம்னோ தலைவர்கள் சொல்லும் காரணம் இது தான்:” குடியேற்றக்காரர்களுக்கு ‘பெரும் தொகை கிடைக்கும். அத்துடன் சராசரி 14 விழுக்காடு தொடர்ந்து ஆதாய ஈவு கிடைக்கும்.”
சுய அழிவுக்கு வழி வகுக்கும்
மலாய்க்காரர்களுக்கு நான் சொல்வது இது தான்: “உங்கள் மதிப்பு அதை விட அதிகமானது. அந்தத் தலைவர்கள் உங்கள் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்தத் திட்டத்துக்குள் அதிகமான ஏழை மலாய்க்காரர்களைக் கொண்டு வருவதோ அந்த நிலங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதோ அவர்கள் நோக்கமல்ல. தங்களது வர்த்தக நோக்கத்துக்காக அந்த நிலத்தை அவர்கள் நாடுகின்றனர்.”
அது பெரிய அளவிலான மோசடி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பெல்டா தொடக்கப்பட்டதற்கான நோக்கங்களுக்கு துரோகம் செய்வதாகும்.
நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் புனிதமான நிறப்பு நோக்கத்துடன் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற அப்துல் ரசாக் பெல்டாவை அமைத்தார்.
தங்களுக்கும் தங்கள் சொந்தக் குடும்பத்துக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் சுய மரியாதையுடன் உழைத்து வருமானம் தேடுவதற்கு ஏழைகளுக்கும் வேலை இல்லாதவர்களுக்கு வாய்ப்பளிக்க அவர் விரும்பினார்.
ஆனால் இப்போது நடப்பது எல்லாம் அந்தக் கனவைக் கேலிக் கூத்தாக்குகிறது. பெல்டா இப்போது மாபெரும் தோட்ட நிறுவனம். அரசாங்க நிலத்தையும் அரசாங்க நிதி வளங்களையும் பெறுவதற்கு அது நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வர்த்தக நிறுவனமாக திகழ்கிறது.
1951ம் ஆண்டு துங்கு எண்ணிய அம்னோ இப்போது இல்லை என்பதைப் போல ரசாக் முதலில் எண்ணிய பெல்டாவாக அது இப்போது இயங்கவில்லை. குடியேற்றக்காரர்களிடமிருந்து பெல்டாவை அகற்றுவதின் மூலம் அந்தக் கட்சி தன்னைத் தானே இப்போது அழித்துக் கொண்டிருக்கிறது. மலாய்க்காரர்கள் அதனைத் தண்டிப்பார்கள்.
குடியேற்றக்காரர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்: பக்காத்தான் ராக்யாட்டிடம் மாற்றுத் திட்டம் ஏதும் உள்ளதா என பொறுத்திருந்து பாருங்கள். அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லதைச் செய்ய முடியுமா ? பெல்டாவுடனான உங்கள் கடன்கள் அனைத்தையும் அது வராத கணக்கில் எழுத முடியுமா எனப் பாருங்கள்.
ஏழைகளுக்கு இன்னும் கொடுக்கப்படாத பெல்டாவிடம் உள்ள நடப்பு நிலச் சொத்துக்களைப் பக்காத்தான் என்ன செய்யும் ? அதனை வேறு வகையாகச் சொன்னால் பெல்டா வளப்பத்தை பக்காத்தான் எப்படி உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறது ? கூட்டுறவுக் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியதைக் காட்டிலும் கூடுதலாக அது என்ன தர முடியும் ?
அடுத்த பொதுத் தேர்தல் மலாய்க்காரர்களுக்குக் குறிப்பாக குடியேற்றக்காரர்களுக்கு முடிவு செய்ய வேண்டிய நேரமாகும். மலாய்க்காரர்களை அம்னோ நீண்ட காலமாக ஏமாற்றி வந்துள்ளதைக் கருத்தில் கொண்டால் அம்னோவை நிராகரிப்பதற்கு வாக்குப் பெட்டிகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு கிடைக்கும் வாய்ப்பு அதுவாகும். இந்த முறை ஈசா சாமாட்டுக்கு நீங்கள் செவி சாய்க்கக் கூடாது- உங்கள் மனச் சாட்சி சொல்வதை கேளுங்கள் என நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.