ஆங்கில நாளேடான த ஸ்டார், உடலில் அல்லாஹ் என்று அரபுமொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கப் பாடகி எரிகா பாடுவின் நிழற்படத்தைப் பிரசுரித்ததில் கெட்ட நோக்கம் எதுவுமில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.
அது,அதன் முஸ்லிம்-அல்லாத ஆசிரியர்களின் அறியாமையால் நிகழ்ந்த பிழை. அரபு மொழியில் அல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது என்று அந்நாளேடு இன்று அதன் தலையங்கத்தில் கூறியிருந்தது.
“தவறு நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொள்கிறோம்”, என்றது கூறியது.
தமது செய்தியாசிரியர்களுக்கு நபிகள் நாயகத்தின் உருவப்படத்தையோ, குர் ஆன் வாசகங்களைக் காண்பிக்கும் புகைப்படங்களையோ பயன்படுத்தக்கூடாது என்பது தெரியும்.
“வழக்கமாக செய்தியாசிரியர்கள் டச்சு, உருது, சீனம், அரபு எனத் தங்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதப்பட்ட சொற்கள் அடங்கிய புகைப்படங்களைக் காண நேர்ந்தால் அச்சொற்களின் பொருளை அறிந்துகொள்ள முனைவார்கள். அவை மனத்தைப் புண்படுத்தக்கூடியவை என்று தெரிந்தால் தவிர்த்து விடுவார்கள்.
“அவப்பேறாக, பாடுவின் படத்தைப் பிரசுரித்த செய்தியாசிரியர்கள் முஸ்லிம்-அல்லாதவர்கள். அல்லாஹ் என்று அரபுமொழியில் எழுதப்பட்டிருந்தது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.
“அறியாமை என்பது ஒரு சரியான காரணம் அல்லதான்.ஆனால், அத்தவற்றுக்குப் பின்னே உள்ள உண்மைக்கதை இதுதான்.எந்தவொரு தீய நோக்கத்துடனும் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்”, என்று த ஸ்டார் கூறியது.
அப்புகைப்படம் வெளிவந்ததைக் கண்டித்த உள்துறை அமைச்சு, அந்நாளேட்டுக்கு எதிராக ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காரணங்காட்டுமாறு கடிதமும் அனுப்பி வைத்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் த ஸ்டார் இரண்டு செய்தியாசிரியர்களைப் பணிஇடைநீக்கம் செய்தது.
ஆனால், வலச் சாரி மலாய் என்ஜிஓ-வான பெர்காசா, அந்நாளேட்டுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதன் பிரசுர உரிமம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறு செய்யப்படாவிட்டால் அச்செய்தித்தாளைப் புறக்கணிக்கும் இயக்கம் ஒன்றை ஏற்பாடு செய்யப்போவதாக மிரட்டியுள்ளது.
இவ்விவகாரம் காரணமாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சு நேற்று நடைபெறவிருந்த அப்பாடகியின் நிகழ்ச்சியை ரத்துச் செய்தது.