தொழில் விரிவாக்க நோக்கில் சிங்கை சென்றதாக என்எப்சி கூறுவது அபத்தம், பிகேஆர்

உள்நாட்டுச் சந்தை சிறியது. அதனால் தொழிலை வெளிநாடுகளிலும் விரிவுபடுத்துவது அவசியம் என்று கருதி  நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) செயல்பட்டு வருவதாக அதன் தலைவர் சாலே இஸ்மாயில் அளித்துள்ள விளக்கத்தில் பொருளில்லை என்கிறார் வியூக இயக்குனர் ரவிசி ரம்லி.

அந்நிறுவனம்,அரசாங்கம் எதற்காக என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில்  ரிம250மில்லியன் கடன் அளித்ததோ அந்த இலக்கைவிட்டு வெகு தொலைவில்தான் இன்னமும் உள்ளது என்று ரவிசி தெரிவித்தார்.

2008-இலிருந்து 2010வரை என்எப்சி 1914 மாடுகளை அறுத்துள்ளது. அதன்வழி (ஒவ்வொரு மாட்டிலும் 200கிலோ இறைச்சி கிடைப்பதாக வைத்துக்கொண்டால்) ஆண்டுக்கு 400 டன் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2009-க்கு அரசாங்கம் நிர்ணயித்த இலக்கு 50,000டன்.

“உள்நாட்டுத் தேவையில் 40 விழுக்காட்டை வழங்கும் என்பதற்காகத்தான் என்எப்சியே உருவாக்கப்பட்டது. அந்த இலக்கை அடையாமல் வெளிநாடுகளில் புதிய சந்தைகள் பற்றிப் பேசும் உரிமை அதற்கில்லை.

“எனவே என்எப்சி-இன் உற்பத்திக்கு உள்நாட்டுச் சந்தை சிறியது என்று சாலே கூறுவது சுத்த பொய்.”

அரசாங்கக் கடன் எதற்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்குத் தொடர்பில்லாத துறைகளில் வெளிநாடுகளில் தொழில் முதலீடுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டது ஏன் என்று என்எப்சி இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அதை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் ரவிசி(வலம்) கூறினார். 

மகளிர்,குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவரான சாலே, என்எப்சி சிங்கப்பூரில் அதற்கென ஒரு சந்தையை உருவாக்கி வருவதாகவும் அடுத்து அது இந்தோனேசியாவில் கண் வைத்துள்ளது என்றும் நேற்று மலேசியன் இன்சைடர் இணையச் செய்தித்தளத்திடம் கூறியிருந்தார்.

நேசனல் ஃபீட்லோட் மையத்தின் அறுப்புக்கூடங்கள் தயாரானதும் அதன் மாட்டிறைச்சி உற்பத்தி 2015 வாக்கில் 70,000 டன்னாக இருக்கும் என்றும் அது மலேசிய சந்தையின் தேவையைவிட அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

“அவ்வளவு மாட்டிறைச்சியையும் மலேசிய சந்தையால் வாங்க முடியாது. அதனால் அதை விற்பதற்கு வேறு இடங்களைத் தேட வேண்டியிருக்கும்”, என்றவர் கூறியதாக தெரிகிறது.

இவ்வளவு சொன்ன சாலே, அவரின் குடும்பத்தார், அரசாங்கக் கடனைத் தவறாகப் பயன்படுத்தி சிங்கப்பூரில் ஒரு நவீன பேரங்காடியைத் திறந்திருப்பதாக ரவிசி  சாட்டிய குற்றச்சாட்டு குறித்து எதுவும் கருத்துரைக்கவில்லை. அவ்விவகாரத்தை “விளக்கி” என்எப்சி விரைவில் அறிக்கை வெளியிடும் என்று மட்டும் கூறினார்.

TAGS: