கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு எஸ்பிளேனேட்டில் லினாஸ்-எதிர்ப்புப் பேரணியில் நிகழ்ந்த சச்சரவு தொடர்பில் முதலமைச்சர் லிம் குவான் எங் உள்பட எண்மரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அன்று, லிம் பேசி முடித்ததும் ஏற்பட்ட சச்சரவில் காயமடைந்த இரு செய்தியாளர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக மாநிலப் போலீஸ் தலைவர் ஆயுப் யாக்கூப் தெரிவித்தார்.
குவோங் வா இட் போ செய்தியாளர்களான ஆடம் சியு,29, லீ ஹொங் சுன்,25,ஆகிய அவ்விருவரும் தங்களிடமிருந்த காணொளி மற்றும் புகைப்படங்களையும் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் இதுவரை, லினாஸ்-ஆதரவாளர்கள்-அவர்களில் அம்னோ, பெர்காசா உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்- முரட்டுத்தனமாக நடந்துகொண்டு அப்பேரணியைக் குலைப்பதற்கு முயன்றதாகக் கூறும் ஐந்து புகார்களைப் பெற்றுள்ளதாகவும் ஆயுப் கூறினார்.
“ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடித்துவிடலாம் என்று நம்புகிறேன்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குவாந்தானில் லினாஸ் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிம்புனான் ஹிஜாவ் நடத்திய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்றை சுவாராம் பினாங்கு பேச்சாளர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது.அதில் 500பேர் கலந்துகொண்டனர்.அக்கூட்டத்தைக் கலைப்பதற்கு லினாஸ்-ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.அப்போது இரு தரப்பினருக்கும் சர்ச்சை மூண்டது.
இதன் தொடர்பில், கூட்டத்தில் கலகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றைச் செய்தியாளர்கள் குழுவொன்று இன்று மாலை மணி 6.30க்கு ஆயுப்பிடம் வழங்கும்.
மகஜரை வழங்கச் செல்லும் அவர்கள், கடமையைச் செய்யும் செய்தியாளர்கள் எதிர்நோக்கும் வன்முறை மிரட்டல் குறித்துக் கவலை கொள்வதை வெளிப்படுத்த கருப்பு உடை தரித்திருப்பர்.
வலைப்பதிவர்கள் தகவல் அளிக்க வேண்டும்
இதனிடையே, ஆயுப், அச்சம்பவத்தைக் கண்ட எல்லாத் தரப்பினரும் விசாரணைக்கு உதவியாக தகவல் அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இணையத் தளங்களில் அச்சம்பவத்தைப் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்களும் கருத்துச் சொல்ல அழைக்கப்படுகிறார்கள்.
“எங்களுக்குத் தேவை உண்மைகள்.நீதிமன்றங்களில் ஆதாரங்களாக பயன்படுத்த முடியாத கதைகள் எல்லாம் வேண்டாம்.
“பல கோணங்களில் அதை விசாரித்து வருகிறோம்”, என்றாரவர்.
இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்கின்றவர்கள் போலீசுக்குத் தெரியப்பட வேண்டும்.அப்போதுதான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“முக்கிய பெருமகனார்(பினாங்கு முதலமைச்சர்) கலந்துகொண்ட அந்நிகழ்ச்சி பற்றி முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். குவாந்தானில் அதைச் செய்தார்கள் என்கிறபோது பினாங்கில் முடியாதா, என்ன?”.
பேரணியின்போது அங்கிருந்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுவதை ஆயுப் மறுத்தார்.
“ஏற்பாட்டாளர்கள் அந்நிகழ்பு பற்றித் தெரிவிக்கவில்லை என்றாலும் நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க முயன்றோம்”.
அச்சம்பவம் பற்றி ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்று எச்சரித்த ஆயுப், போலீசார் அவர்களின் கடமையைச் செய்ய அனுமதியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.