சபா குடியேற்றக்காரர்கள் பிரச்னை மீது அரச விசாரணை ஆணையத்தை அமைக்கும் விசயம் இன்னும் பரிசீலினையில் இருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொன்னது, சரியே என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அந்த விவகாரம் மீது நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தார்.
அந்த விவகாரம் மீதான அமைச்சரவை முடிவு பற்றி நஸ்ரியிடம் வினவப்பட்டது.
முதலில் அவர் அது குறித்துக் கருத்துரைக்க மறுத்து விட்டார். அந்தக் கேள்வியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் எழுப்புமாறும் நஸ்ரி கூறினார்.
“நீங்கள் பிரதமரைக் கேட்க வேண்டும். பிரதமரை கேளுங்கள். நான் பதில் அளிக்கும் நிலையில் இல்லை. பதில் அளிப்பதற்கு இறுதி நபர் பிரதமர் ஆவார்”, என்றார் அவர்.
ஆர்சிஐ பற்றி இன்னும் பரிசீலிக்கப்படுவதாக நஜிப் கூறியிருப்பதாக ஒரு நிருபர் நஸ்ரியிடம் சொன்ன போது “அதுதான். பிரதமர் சொன்னதுதான் சரி”, என்றார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிஐ-யை அமைசரவை அங்கீகரித்துள்ளது என்றும் நஜிப் விரைவில் அதிகாரத்துவ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் இதற்கு முன்னர் பல சபா பிஎன் தலைவர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
அந்த ஆணையம் விசாரிக்க வேண்டிய விசயங்கள், அதன் உறுப்பினர்கள் போன்ற விவரங்களை அமைச்சரவை ஆய்வு செய்வதாகவும் கூறப்பட்டது.
குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கி, அவர்களை சபாவில் அம்னோ/பிஎன் ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் பொருட்டு வாக்காளர்களாக மாற்றும் நோக்கத்தைக் கொண்ட கள்ளத்தனமான நடவடிக்கை எனக் கூறப்படும் அடையாளக் கார்டு திட்டத்தை ஆர்சிஐ ஆய்வு செய்யும் எனக் கூறப்படுகிறது.