பெல்டா செண்டாயான் குடியேற்றக்காரர் ஆர் தங்கம் குடும்பம் KPF என்ற Koperasi Permodalan Felda கூட்டுறவுக் கழகத்தில் ஒரு மில்லியன் பங்குகளை வைத்துள்ளது.
அந்தப் பங்குகளில், அவரது பங்குகளும் அவர் மனைவியின் பங்குகளும் அவரது இரண்டு சகோதரர்களுடைய பங்குகளும் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட பங்குகளும் அடங்கும்.
அந்த முழுக் குடும்பத்தையும் எடுத்துக் கொண்டால் தங்கம் குடும்பம் அந்த KPF கூட்டுறவுக் கழகத்தில் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் சாத்தியமும் உண்டு. ஏழைகளுக்கான நிலம் என்ற பெல்டா திட்டத்தில் பங்கு கொண்ட மலாய்க்காரர் அல்லாத சில குடும்பங்களில் அதுவும் ஒன்றாகும். உத்தேசப் பங்குப் பட்டியல் நடவடிக்கை மூலம் அந்தக் குடும்பத்துக்கு பெரும் பணம் கிடைக்கும்.
“அந்த Felda Global Ventures பங்குப் பட்டியல் நடவடிக்கை மூலம் நாங்கள் மில்லியன் கணக்கில் பணம் பண்ண முடியும். ஆனால் நான் அதனை ஆதரிக்கவில்லை. இது எங்களுக்கு ஒய்வூதியமாகும். நாங்கள் பங்குச் சந்தையில் சூதாட விரும்பவில்லை,” என அவர் புதன் கிழமை நடத்தப்பட்ட சந்திப்பின் போது கூறினார்.
தங்கம் 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குடியேற்றத் திட்டத்தில் பிறந்தார். பண்டார் ஸ்ரீ செண்டாயானில் தங்கம் ஆடம்பரமான வீடு ஒன்றில் வாழ்கிறார். அந்த வீடு நெகிரி செம்பிலான் பெல்டா குடியேற்றத் திட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக அவர் வாழ்க்கையைத் தொடங்கியதுடன் ஒப்பிடுகையில் அது பெரிய முன்னேற்றமாகும்.
இராணுவத்தில் 11 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் பெல்டா செண்டாயானுக்குத் திரும்பிய தங்கம் KPF பங்குகள் வழி கிடைத்த வருமானத்தை சிறிது சிறிதாக சேமித்தார். ஆனால் இப்போது அந்த “பங்குப் பத்திரங்கள் பயனற்ற காகிதங்களாக” மாற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
குடும்பத்தில் உள்ள அனைவரும் மொத்தம் ஆதாய ஈவாக மாதம் ஒன்றுக்கு குறைந்தது 15,000 ரிங்கிட்டைப் பெறுவதாக அவர் சொன்னார். கடந்த 30 ஆண்டுகளாக சராசரி 14 விழுக்காடு ஆதாய ஈவை KPF வழங்கி வந்துள்ளது- அவர்கள் வேலை செய்யாமல் இருப்பதற்கு அந்த வருமானம் போதுமானது தான்.
“பங்குச் சந்தையில் உண்மையில் பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பது உண்மையே. ஆனால் KPFல் எங்களுக்கு 10 விழுக்காடு ஆதாயம் கிடைப்பதற்கு உத்தரவாதம் உண்டு. பங்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா ?” என தங்கம் வினவினார்.
தலைமை நிறுவனமான பெல்டா ஹோல்டிங்ஸில் KPFக்கு உள்ள 51 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு FGVH முன் வந்துள்ளது. அதற்கு ஈடாக FGVHல் அதே அளவு பங்குகளை கொடுக்க FGVH தயாராக இருக்கிறது.
ஆனால் பொது மக்களுக்கு பங்குகள் விற்கப்பட்ட( initial public offering )பின்னர் FGVHல் உள்ள KPF பங்குகளின் அளவு 37 விழுக்காடாகக் குறைந்து விடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அது சிறுபான்மை பங்காகும் அதன் மதிப்பு 4 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பெல்டா ஹோல்டிங்ஸில் KPFக்கு உள்ள பெரும்பான்மைப் பங்குகளின் மதிப்பைக் காட்டிலும் 1 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும்.
“நிச்சயமாக அது அதிகமாக இருக்கும். ஆனால் குடியேற்றக்காரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும். பேரதிர்ஷ்டம் காத்திருப்பதாக அவர்கள் அடிக்கடி சொல்கின்றனர். ஆனால் அது எப்படிப் பகிர்ந்தளிக்கப்படும் ?” எனத் தங்கம் வினவினார்.
கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்
தனி நபர் ஒருவர் கூடின பட்சம் வைத்திருக்கக் கூடிய அளவான 250,000 KPF பங்குகளை 60 பேர் மட்டுமே வைத்துள்ளதாக ஆறு பிள்ளைகளுக்குத் தந்தையான அவர் சொன்னார். 60,000 மக்கள் 500க்கும் குறைவான பங்குகளையே வைத்துள்ளதாக 2010ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை கூறுகிறது.
“ஆகவே ஈசா சாமாட் வாக்குறுதி அளித்துள்ளது போல அவர்கள் எப்படி கோடீஸ்வரர்களாக மாற்றப்படுவர்?”
கடந்த வாரம் KPF விளக்கக் கூட்டத்தின் போது அந்த விஷயத்தை பிகேஆர் ராசா தொகுதி துணைத் தலைவருமான தங்கம் எழுப்பினார். அவர் பெல்டா தலைவர் ஈசா-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் குடியேற்றக்காரர், கூட்டம் நிகழும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
“அது சரி அல்ல,” என சபாருடின் முகமட் யாசின் என்ற 62 வயது முன்னாள் செண்டாயான் குடியேற்றக்காரர் கூறினார். அவர் 250,000 KPF பங்குகளை வைத்துள்ளார். அவரது தந்தையார் 1970களில் அந்த நிலக் குடியேற்றத் திட்டத்தில் சேர்ந்தார்.
“பங்குதாரர்கள் என்ற முறையில் எங்கள் பங்குகளுக்கு என்ன நேரும் என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அவற்றை FGVH பங்குகளாக மாற்றிக் கொள்ள முடியுமா? அது ஒன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் இருக்குமா? KPF உறுப்பினர்களுக்கு எத்தனை பங்குகள் வழங்கப்படும்? என அவர் இன்னும் பதில் கிடைக்காத கேள்விகளை அடுக்கினார்.
அவர் கோல்ப் திடல் ஆலோசகர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். மாதம் ஒன்றுக்கு KPF வழங்கும் 3,000 ரிங்கிட் ஆதாய ஈவை அவர் தமது அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். அந்த விவகாரம் மீது போதுமான தகவல்கள் இல்லாததால் ஏதோ குளறுபடி இருப்பதாக அவர் எண்ணுகிறார்.
“அது எங்களுக்கு உண்மையிலேயே பலன் அளிக்கும் என்றால் அவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு விவரமாக கூறுங்கள்,” என முன்னாள் செண்டாயான் அம்னோ கிளைத் தலைவருமான சபாருடின் கேட்டுக் கொண்டார். 1996ம் ஆண்டு மாநில அரசாங்கம் எடுத்த ஒரு நடவடிக்கையால் “பாதிக்கப்பட்ட” பின்னர் அவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறினார்.
1996ம் ஆண்டு பெல்டா செண்டாயான் குடியேற்றக்காரர்கள் தங்கள் ரப்பர் மரங்களை வெட்டி விட்டு தங்கள் நிலத்தை அப்போது ஈசா வழி நடத்திய மாநில அரசாங்கத்திடம் விற்று விட்டனர். ஆனால் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட விற்பனை விலையில் 10 விழுக்காட்டு மட்டுமே கொடுக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நீடித்த இழுபறி போராட்டத்துக்குப் பின்னர் பெரும்பாலான குடியேற்றக்காரர்கள் புதிய மந்திரி புசார் முகமட் ஹசான் வழங்க முன் வந்த “ஏற்பட்டை” ஒர் இழப்புடன் ஏற்றுக் கொண்டனர்.
பெல்டா செண்டாயானைச் சுற்றிலும் வசிக்கும் மக்களையும் மலேசியாகினி சந்தித்தது. செண்டாயான் நிலப் பேரத்தில் ஈசா ஆற்றிய பங்கு குறித்து தாங்கள் இன்னும் ஆத்திரமாக இருப்பதை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இப்போது புதிய பெல்டா எஜமானராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஈசா அளிக்கும் வாக்குறுதிகள் பற்றியும் அவர்கள் அதே போன்று சந்தேகம் கொண்டுள்ளனர்.
அந்த அச்சத்தை அதிகரிக்கும் வகையில் பங்குச் சந்தையில் தோல்வி கண்ட பல அரசாங்க ஆதரவு நிறுவனங்களுடைய பட்டியலை சபாருடின் வெளியிட்டார்.
அவரது அச்சத்துக்கும் ஆதாரம் இருக்கிறது. “பங்குகள் மூலம் அரசாங்கம் புதிய நிறுவனத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றிருக்கும்” என்பதால் முதலீட்டாளர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்’ என ராய்ட்டர் செய்தி ஒன்று குறிப்பிட்டது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அம்னோ தேர்தல்களில் வாக்குகளை வாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் கறை படிந்துள்ள ஈசா பற்றி சபாருடின் அடைந்துள்ள கவலையை முதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்வதாகவும் அந்த செய்தி கூறியது.
அந்த நிலத்துடன் உளப்பூர்வமான பிணைப்பு
தங்கத்தைப் பொறுத்த மட்டில் பெல்டா நிலம் என்பது உளப்பூர்வமான பிணைப்புக்களைக் கொண்டதாகும்.
குடியேற்றக்காரர்களுடைய நிலம் FGVH பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் சம்பந்தப்படாது என்றாலும் அதில் பெல்டா தோட்டங்களின் 350,000 ஹெக்டர் நிலமும் அடங்கியுள்ளது.
பெல்டா திட்டத்தில் சேருவதற்கு முடிவு செய்ததின் மூலம் தமது குடுபத்தின் தலைவிதியையே மாற்றிய தோட்டத் தொழிலாளி ஒருவருடைய புதல்வரான தங்கம், நெல் பயிரிடுவதற்காக வெட்டுக் கிளிகளுடன் தமது குடும்பம் போராடியதை மறக்கவில்லை.
“அந்த நிலம் ஏன் திறந்த சந்தைக்கு விடுவிக்கப்பட வேண்டும். அது பெல்டாவில் மலேசியர்களுடைய கரங்களில் தொடர்ந்து இருக்க வேண்டும். புதிய குடியேற்றக்காரர்களுக்கு நிலத்தை திறப்பதை நான் விரும்புகிறேன். குடியேற்றக்காரர்களுடைய வியர்வையிலும் ரத்தத்திலும் உருவானது பெல்டா ஆகும்,” எனத் தங்கம் சொன்னார்.
KPFக்கு இன்னும் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கூட்டுறவுக் கழகம் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பங்கு பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை தொடரும் என ஈசா கூறுகிறார்.
அவ்வாறு செய்தால் KPF பங்குதாரர்களுக்குப் பாதகம் ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காரணம் நன்கு வளர்ச்சியடையக் கூடிய வர்த்தகங்களும் திட்டங்களும் FGVH கட்டுக்குள் உள்ள துணை நிறுவனங்களில் அந்த பங்குதாரர்களுக்கு உரிமை இருக்காது.
அந்தச் சூழ்நிலையில் பெல்டா ஹோல்டிங்ஸின் வருமானம் குறைந்து விடும். அப்போது உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஆதாய ஈவை வழங்குவது சிரமமாகி விடும்.
“ஆனால் KPFல் எங்களுக்கு 10 விழுக்காடு ஆதாய ஈவுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் FGVHன் அடைவு நிலையைப் பொறுத்து அது ஐந்து விழுக்காடாகக் கூட இருக்கலாம். அப்போது நாங்கள் எப்படிச் சாப்பிடுவது ?” என சபாருடின் வினவினார்.
பங்குப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் குடியேற்றக்காரர்களுடைய நலன்களைப் பிரதிநிதிக்கச் சிறப்பு அமைப்பு ஒன்று அமைக்கப்படும் என ஈசா அறிவித்துள்ளார். அதனால் குடியேற்றக்காரர்களாக இருக்கும் KPF பங்குதாரர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் எனத் தோன்றுகிறது.
உண்மையில் பேரதிர்ஷ்டம் இருக்குமானால் KPF பங்குகள் வழியாக அந்த நன்மைகள் குடியேற்றக்காரர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என தங்கம் நம்புகிறார்.
“பணத்தை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கு முதிய குடியேற்றக்காரர்களை நீங்கள் குறை சொல்லக் கூடாது. காரணம் அது பாசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் தங்களுக்கு பிற்காலத்திலும் ஒரளவு பணம் தேவைப்படும் என்பதை அவர்கள் உணருவதில்லை,” என தங்கம் மேலும் கூறினார்.