ஐஎஸ்ஏ கைதி:மலேசியாகினி பற்றிக் கேட்டார்கள்; அம்னோவில் சேரச் சொன்னார்கள்

புரட்சி நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த படருடின் இஸ்மாயில், தாம் 2001-இல் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மலேசியாகினி பற்றித் தெரியுமா என்பது உள்பட, குற்றச்சாட்டுக்குத் தொடர்பில்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டதாகக் கூறினார். 

இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த படருடின்(வலம்), ஒரு கட்டத்தில் மலேசியாகினி செய்தியாளர்களுடன் தொடர்புண்டா என்று வினவப்பட்டது என்றார். 

“அதில் யாரையெல்லாம் தெரியும்;அவர்களின் (அரசியல்) நாட்டம், நம்பிக்கை;மலேசியாகினிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேட்டார்கள்”, என்று படருடின் கூறினார். படருடின்,  கைது செய்யப்பட்ட வேளையில் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பான சுவாராமில் செயலக உறுப்பினராக இருந்தார். 

அப்போதிருந்த பார்டி கெஅடிலான் நேசனல், சுவாராம், ரீஃபோர்மாசி இயக்கம் பற்றியெல்லாம் அவரிடம்  வினவப்பட்டது.

“அன்வார் இப்ராம் பற்றிக் கேட்டார்கள்.அன்வார் ‘வெளிநாட்டுக் கைக்கூலி’ என்றும் ஒழுக்கம்கெட்ட மனிதர் என்றும் என்னை நம்ப வைக்க முயன்றார்கள்”.

தடுப்புக்காவலில் இருந்த 41-நாளும் நடைபெற்ற அன்றாட விசாரணைகளில், குற்றச்சாட்டுடன் தொடர்பில்லாத விசயங்கள் பற்றித் தகவல் சேகரிப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதாக படருடின் கூறினார்.

சிறப்புப் பிரிவு நான் அம்னோவில் சேர்வதை விரும்பியது’

2001-இல், ஐஎஸ்ஏ பகுதி 8,பகுதி 73-இன்கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டது அரசமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி சிவில் வழக்கு தொடர்ந்துள்ள ஐவரில் படருடினும் ஒருவர்.அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2001-இல்,ரீஃபோர்மாசி தலைவர்கள் பலர், அரசாங்கத்தை வன்முறையில் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள்.அவர்களில், படருடினும் ஒருவர்.

தியான் சுவா,  ராஜா பெட்ரா கமருடின், ஹிஷாமுடின் ரயிஸ்,என்.கோபாலகிருஷ்ணன், இசாம் முகம்மட் நூர், லொக்மான் ஆடம், பத்ரோலமின் பஹ்ரோன் போன்ற பலரும்கூட அப்போது கைது செய்யப்பட்டனர்.

வாதியின் வழக்குரைஞர் ஹோ கொக் இயு, கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை வினவியதற்கு பொது ஒழுங்கைக் கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகக் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர் என்று படருடின் கூறினார். 

ஆனால், உண்மையான நோக்கம் வேறு, தம் அரசியல் கொள்கைகள் பிடிக்காமல்தான் கைது செய்தார்கள் என்றும் எதிர்வாதிகள்-அவர்களில் அப்போதைய போலீஸ் படைத் தலைவர் நோரியான் மாயும் ஒருவர்- அதிகாரத்தைமீறி நடந்து கொண்டார்கள்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

“என்னிடம் அரசியல் கேள்விகளையே(விசாரணை அதிகாரிகள்)கேட்டனர். மாற்றரசுக் கட்சி(கெஅடிலான்) திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விசாரித்தனர்.

“அம்னோவில் சேருமாறுகூட கட்டாயப்படுத்தினார்கள்”, என்றாரவர்.

நோரியான் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தாதிருந்தால் தாம் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் சொன்னார்.

2001 ஏப்ரல் 11-இல், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்திருந்த செய்தியை அவர் சுட்டிக்காட்டினார்.அதில் நோரியான்(இடம்) மேலும் பல “தீவிரவாதிகள்” கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லியிருந்தார். அதனை அடுத்து ஏப்ரல் 26-இல் படருடின் கைதானார்.

“நோரியான் ஆதாரமின்றிச் சுமத்திய குற்றச்சாட்டின் விளைவாக 41-நாள்கள் ஐஎஸ்ஏ-இனிகீழ் தடுத்து வைக்கப்பட்டேன்.அதனால் என் பெயரும் என் குடும்பத்தின் பெயரும் கெட்டுப்போனது”, என்றாரவர்.

சுஹாகாம் சந்திப்புக்குமுன் வாய்ப்பூட்டு

சுஹாகாம் ஆணையர்கள் தம்மைச் சந்திக்க வந்தபோது அவர்களிடம் தகவல்கள் எதுவும் தெரிவிக்கக்கூடாது என்று விசாரணை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறினார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுஹாகாமுடன் சந்திப்பு நடந்தபோது “போலீஸ் சிறப்புப் பிரிவின் துணை இயக்குனர் ஒருவர்” உடன் வந்ததாகவும் அவர் சொன்னார்.

அச்சந்திப்பு 10 நிமிடம் மட்டுமே நீடித்தது என்று குறிப்பிட்ட படருடின்,“என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பதால் என்னால் சுஹாகாமிடம் அதிகம் பேச முடியவில்லை”, என்றார்.