பள்ளிக்கூடக் குழப்பத்துக்கு டிஏபி-யே காரணம் என்கிறார் நோ ஒமார்

பண்டார் சுங்கை லோங்-கில் நேற்று நிகழ்ந்த கூட்டம் ஒன்றில் தாங்கள் தாக்கப்பட்டதாக டிஏபி உறுப்பினர்கள் கூறிக் கொள்வதற்கு விவசாய, விவசாயத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் பதில் அளித்துள்ளார்.

அங்கு நிகழ்ந்த குழப்பத்துக்கு டிஏபி உறுப்பினர்களே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“டிஏபி பெரிய பொய்யர் என்பதை அது நிரூபிக்கிறது. அவர்கள் “சம்சிங்குகளை” போல வந்தனர். பிஎன் நிகழ்வு ஒன்றுக்குள் அவர்கள் அத்துமீறி நுழைந்தனர். ஆனால் பிஎன் மீது குற்றம் சாட்டப்படுகிறது.”

“நான் நிலமையை சாந்தப்படுத்த அங்கு சென்றேன். அதனாநான் “சம்சிங்”கைப் போல நடந்து கொள்வதாக குறை கூறப்பட்டேன். உண்மை நிலவரங்களை டிஏபி நிச்சயமாகத் திரித்து விட்டது,” என அவர் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூரில் பண்டார் சுங்கை லோங் தேசிய வகை சீனத் தொடக்கப் பள்ளியின் கட்டுமானத் தளத்திற்கு வெளியில் தாங்கள் தாக்கப்பட்டதாக காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்-கும் மற்றும் பல டிஏபி உறுப்பினர்களும் நேற்றுக் கூறிக் கொண்டனர்.

அந்த சீனத் தொடக்கப் பள்ளியின் கட்டுமானத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வந்து சேருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக தாங்கள் தாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தாமும் 20க்கும் மேற்பட்ட முன்னாள் இன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் பச்சை நிற டி சட்டைகளை அணிந்து கொண்டு அந்த இடத்துக்குச் சென்றதகாவும் பிஎன், ஒரே மலேசியா டி சட்டைகளை அணிந்திருந்த 30 முதல் 40 பேர் தங்களைத் தடுத்து நிறுத்தி தாக்கியதாகவும் லீ சொன்னார்.

பிஎன் ஆதரவாளர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு தமது குழுவில் இருந்த நால்வரை உதைத்தனர். தரையில் தள்ளினர் என்றார் அவர்.

அந்த விவகாரம் மீது இன்று பின்னேரம் நிருபர்கள் சந்திப்புக்கு லீ ஏற்பாடு செய்துள்ளார்.