சிறீலங்காவுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் எழுப்ப அனைத்து ஹிண்ட்ராப் மாநிலத் தலைவர்களும் வற்புறுத்தல்

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்த ஹிண்ட்ராப் ஆலோசகர் திரு. கணேசனின்  ஆலோசனைக்கு அனைத்து மாநில ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர்களும்  ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஏற்க வகை செய்யும்  நோக்கில், எதிர்கட்சிகள் தம் கட்டுபாட்டில் உள்ள நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களையும் அவசரமாகக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் திரு கணேசனின்  யோசனையை சிலாங்கூர் ஹிண்ட்ராப் இயக்கம் முழுமனதாக வரவேற்கிறது.

அருவருக்கத் தக்க வகையில் சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை தமிழர்களை இன படுகொலை செய்த சிங்களப் பெரும்பான்மை அரசுக்கு எதிராக மலேசிய அரசு,  மலேசிய  மக்களின் சார்பில் கண்டனத்தையும் தொடர்ந்து ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகக்  கொண்டுவரபடவிருக்கும்   தீர்மானத்தையும் ஆதரிக்க தயக்கம் காட்டுவது கண்டிக்க தக்கதாகும்.

மலேசிய  அரசின் இந்த நியாயமற்ற செயலை எதிர்கட்சிகள்  கண்டித்து குரல் எழுப்ப முன் வரேவேண்டும் என்கிறார் சிலாங்கூர் ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் திரு. தமிழ்ச்செல்வம்.

DAP, PAS, மற்றும் PKR  கட்சிகள் மனித உரிமை என்று வரும்போது பாரிசான் அரசை போன்றல்லாமல், விவேகமாகவும் எவ்வித விருப்பு வெறுப்புமில்லாமல் நடுநிலையாக நின்று இன மத பாகுபாடில்லாமல் தர்மத்திற்குக் குரல் கொடுப்பவர்கள் என்பதை இந்நாட்டு இந்தியர்களுக்கு மெய்ப்பிக்கும்  வகையில் கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் கிளந்தான் ஆகிய சட்டமன்றங்கள்  அவசரமாக கூட வேண்டும். இந்த அவசர கூட்டத்தில் மலேசிய அரசாங்கத்தை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கும் வகையில்  தீர்மானங்கள்   நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் திரு. தமிழ்செல்வம்.

இதே கருத்தை வலியுறுத்திய பேராக்   ஹிண்ட்ராப் இயக்க தலைவர் திரு ரமேஷ் இவ்விவகாரம் குறித்து DAP , PAS , மற்றும் PKR  கட்சிகளின் தலைவர்கள்  அவரவர்தம் நிலைப்பாட்டை வெளிப்படையாக மலேசிய இந்தியர்களுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் தற்போது நிலவுவதாக கூறினார்.
 
கெடா மாநில ஹிண்ட்ராப் இயக்க தலைவர் திரு. ராமு, அவசர சட்டமன்றத்தை கூட்டுவதன் மூலமும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க வேண்டும் என  மலேசிய அரசாங்கத்தை வற்புறுத்தும் மசோதாவைக் கொண்டுவருவதன் மூலமும் எதிர்கட்சிகள்  மலேசிய  இந்தியர்களின் மனக்குமுறல்களை மதிக்கின்றன என்பதை உறுதி படுத்த முடியும் என்றார்.
பினாங்கு மாநில ஹிண்ட்ராப் இயக்க தலைவர் திரு கலைச்செல்வம் அம்னோ தலைமையிலான பாரிசான் அரசுக்கு தாங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்பதை இவ்வாறு செய்வதன் மூலம்  பக்கத்தான்  ராக்யாட் கூட்டணி  நிரூபிக்க வேண்டும் என்றார்.

ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகரின் கருத்துக்கு ஜோகூர் மாநில ஹிண்ட்ராப் சக்தியின் முழு ஆதரவு தருவதாகவும் , எதிகட்சிகளின் வசம் இருக்கும் சட்டமன்றங்கள் இந்த நோக்கத்துக்காக உடனடியாகக் கூட வேண்டும் என்றும் வலியுறித்தினார் அதன் தலைவர் திரு மோகன்.

இலங்கை தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் மலேசிய தமிழர்களின் உள்ளங்களில் ஆறாத காயமாக பதிந்திருப்பதால், இந்த பிரச்சனையைத் தீவிரமாக கையாள வேண்டியது வெகு அவசியம் என்றார் நெகிரி  மாநில ஹிண்ட்ராப் தலைவர் திரு சிவகுமார்.

மலேசிய இந்தியர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் செயல் பட முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.