என்எப்சி 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனையும் முழுமையாகப் பெற்றுள்ளது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் முழுவதையும் எடுத்து விட்டதாக டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறுகிறார்.

“2008ம் ஆண்டு அந்த நிறுவனம் முதலில் 130 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது. 2009ம் ஆண்டுக்குள் அது 250 மில்லியன் ரிங்கிட் முழுக் கடனையும் பெற்று விட்டது என்பது என்எப்சி கணக்காய்வு அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது,” என டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் அவர் சொன்னார்.

அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனில் 181 மில்லியன் ரிங்கிட் மட்டுமே என்எப்சி-க்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக விவசாய, விவசாயத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் கடந்த ஆண்டு கூறியுள்ளதற்கு மாறாக அந்த  விவரம் அமைந்துள்ளது.

அந்த நிறுவனத்துக்கு அதே தொகையே கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

நஜிப்பும் நோ ஒமாரும் பொய் சொல்வதாக அவர்களது அறிக்கைகள் வெளியிடப்பட்ட பின்னர் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ஒமார் குற்றம் சாட்டினார்.

மாட்டிறைச்சி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்ட தேசிய விலங்குக் கூட மய்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்எப்சி-க்கு கொடுக்கப்பட்டது. அது உள் நாட்டு மாட்டிறைச்சித் தேவையை 40 விழுக்காடு பூர்த்தி செய்யும் இலக்கையும் கொண்டிருந்தது.

ஆனால் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவருமான என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனை தவறாகப் பயன்படுத்தியதாக  கூறப்படுகிறது.

TAGS: