பச்சை நிற சட்டையை அணிந்திருந்த தாமும் 20 முன்னாள் இன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் குடியிருப்பாளர்களும் அடங்கிய தமது குழுவினரும் பண்டார் சுங்கை லோங்-கில் புதிய பள்ளிக்கூட கட்டுமானத்துக்கான தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களாக சென்றதாக காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறுகிறார்.
அம்னோ அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதைப் போல ‘சம்சிங்’களாக (ரௌடிகள்) நாங்கள் அங்கு செல்லவில்லை என்றார் அவர்.
தாங்கள் தகராறு செய்வதற்காக அந்த பிஎன் நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்ததாக விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் கூறியதையும் லீ மறுத்தார்.
அவர் தமது கூற்றை நிரூபிக்கும் பொருட்டு சுங்கை லோங்-கில் அந்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு மிக அருகில் உள்ள தமது வீட்டிற்கு அனுப்பப்பட்ட பிஎன் அழைப்புத் துண்டு பிரசுரத்தின் பிரதி ஒன்றையும் லீ காட்டினார்.
ஆகவே விருந்தினராக தாம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் எண்ணிக் கொண்டார். பண்டார் சுங்கை லோங்-கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சீனப் பள்ளி அமைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியை மற்ற குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வதே தமது நோக்கம் என லீ சொன்னார்.
“நாங்கள் 14 ஆண்டுகளாக அந்த தேசிய வகை சீனத் தொடக்கப் பள்ளிக்கூடத்துக்காகப் போராடி வருகிறோம். நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். அதனால் அந்த நிகழ்வை நாங்கள் எந்த வழியிலும் குழப்பப் போவதில்லை.”
“எங்களை ஒரு குழு தாக்கியது. பின்னர் நோ ஒமார் அந்த இடத்துக்கு வந்தார். நாங்கள் தகராறு செய்வதாகக் குற்றம் சாட்டினார். நான் மிகவும் வியப்படைந்தேன்,” என பண்டார் மகோட்டா செராஸில் அவர் நிருபர்களிடம் கூறினார்.
“உண்மையில் அந்தச் சம்பவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்காதது குறித்து நான் வருத்தம் அடைந்தேன். நாங்கள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டு உதைக்கப்பட்டோம்,” என்றார் அவர்.
“பிஎன் ஆதரவாளர்கள் மட்டுமே வரவேற்கப்படுகின்றனர் என எழுதுங்கள்”
“அடுத்த முறை நிகழ்வு பிஎன் ஆதரவாளர்களுக்கு மட்டும் எனத் துண்டுப் பிரசுரங்களில் எழுதுங்கள்,” என்றார் அவர்.
அந்த நிருபர்கள் சந்திப்பின் போது நேற்று தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பலரும் இருந்தார்கள். அவர்களில் காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களான சியோங் சியூ பூன், இங் திய சீ, செர்டாங் எம்பி-யின் உதவியாளர் சென் பாண்டாவ், டிஏபி உறுப்பினர் சான் ஹுவான் குவான் ஆகியோரும் அடங்குவர்.
என்றாலும் பச்சை நிற ஆடையை தாம் அணிந்திருந்தது மௌனமான எதிர்ப்புக்கு ஒர் அடையாளம் என சியோங் ஒப்புக் கொண்டார்.
குவாந்தான் கெபெங்கில் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைவதை மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குக் காட்டுவதே தமது நோக்கம் என்றார் அவர்.
தம்மைத் தாக்கிய நபர் எனது கைத் தொலைபேசியை பிடுங்கவும் முயன்றார் என சியோங் சொன்னார். தாம் திருப்பித் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“என் புதல்வி பிறந்த நாள் முதல் 15 மாதங்கள் நிறைவடையும் வரையில் நான் எடுத்த படங்கள் அதில் உள்ளன. என்னிடம் மற்ற பிரதிகள் இல்லை,” என்றார் அவர்.
“எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. அவர்கள் சம்சிங்-குளாக மட்டும் இல்லை. கொள்ளைக்காரர்களாகவும் இருந்தார்கள். எல்லாம் போலீசார் சுற்றிலும் இருந்த போது நிகழ்ந்தது.”
ஆனால் சான் -க்கு அந்த அளவு அதிர்ஷடமில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு தமது தாயார் கொடுத்த புத்தர் சின்னத்தைக் கொண்ட தங்க நெக்லஸ் அந்தக் குழப்பத்தில் பறிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறிக் கொண்டார்.
அதன் மதிப்பு கிட்டத்தட்ட 5,000 ரிங்கிட் என சான் மதிப்பிட்டார்.