தேர்தல் எப்போ வரும்? பரிசுக்கூடைகள் உடன் வருமா?

விடாக்கொண்டன்: கோமாளி, தேர்தல் எப்போ வரும்? பரிசுக்கூடைகள் உடன் வருமா? இடைத் தேர்தல் போல், ஆட்டுக் கறியும், கோழிக்கறியும் உண்ண ஆசையாக உள்ளது?

கோமாளி: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போது பணப் பட்டுவாடாவை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்க டாலர் வீழ்ச்சியானது, இந்த முதலீட்டுத் திட்டங்களை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டவை. முதலீடு செய்பவர்கள் இலாபத்தையே அடிப்படையாக கொள்வார்கள். நமது நாடு ஒரு ‘மேக் அப்’ போட்ட நாடு. உருப்படியான அறிவுத்திறன் கிடையாது. நாமாகவே அயல்நாட்டுடன் போட்டியிட எவ்வித சுய உற்பத்தி கிடையாது. பெட்ரோலியம், செம்பனை, ரப்பர் போன்றவைகூட நமது செலவினங்களை கட்டுப்படுத்தப்போதாது. உதாரணமாக நாம் உருவாக்கும் புரோட்டன் கார்களை பாதி விலைக்குகூட அயல்நாடுகளில் விற்க முடிவதில்லை. எனவே, பொறுப்பற்ற வகையில் அதிக சுமைகளை தாங்கும் நிலையில் நாடு உள்ளது. தொடர்ந்து உண்டாகும் விலைவாசி கட்டுக்கடங்காமல் போகும் நிலையும் உள்ளது. ஏற்றுமதியில் 60 விழுக்காட் டுக்கு மேல் உறபத்தி பொருட்கள், இதன் அளவு டாலர் வீக்கத்தால் குறையும்.

நமது அமைச்சர்களில் அறிவு சார்ந்த நிலையில் திட்டம் போட்டு நாட்டை உயர்த்த தயாராகயில்லை. எப்படியாவது மக்களை மயக்கி அரசியல் அதிகாரத்தை பெற்று கொள்ளையடிக்க திட்டம் போடுபவர்களைத்தான் காண முடிகிறது. நாடு உலக அரங்கில் எப்படிப் பேர் போடும்.

எனவே, ‘வரும்முன் காப்போன்’ என்பதே சிறந்த யுக்தி. காலம் தாழ்த்தினால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த இயலாது. பிரதமர் இந்த வருட இறுதிக்குள் தேர்தலை நடத்த முயலலாம். ஆனால், எதிர்கட்சியின் ஆதரவு தொடர்ந்து வலுவாக இருப்பதால், அதை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பயன் அளித்தால், தேர்தலை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கலாம்.

கோமாளியின் கணிப்பு, தேர்தலை எப்போது வைத்தாலும், அதன் முடிவில் மாற்றம் இருக்காது. அயராது உழைத்த பாரிசானுக்கு ஓய்வு தேவை என்பதை மக்கள் உணர்த்த தயாராகவே உள்ளனர்.