பிஎஸ்எம் மீதான தேசத் துரோக புலனாய்வை போலீஸ் இன்னும் கைவிடவில்லை

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சிக்கு எதிரான தேசத் துரோகக் குற்றச்சாட்டு மீதான போலீஸ் புலனாய்வு இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது.

வாக்குமூலம் கொடுப்பதற்காக பெர்லிஸில் உள்ள ஆராவ் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு திங்கட்கிழமை வருமாறு அந்தக் கட்சியின் ஒன்பது உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அவர்களில் அவசர காலச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஐவரும் அடங்குவர்.

இன்று கோலாலம்பூரில் உள்ள பிஎஸ்எம் தலைமையகத்தில் நிருபர்களைச் சந்தித்த அதன் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமார், வழக்குரைஞர் என் சுரேந்திரன் ஆகியோர் அந்தத் தகவலை வெளியிட்டனர். போலீஸ் நடவடிக்கை அச்சுறுத்தலுக்கு ஒப்பாகும் என்றும் அவர்கள் வருணித்தனர்.

“அவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அதே விஷயத்துக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். கேள்வி கேட்பதற்காக அவர்களை மீண்டும் அழைப்பது போலீசாரின் அதிகார அத்துமீறல், அச்சுறுத்தல் ஆகும்.”

“இது மிகவும் கவலை அளிக்கிறது. தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட பின்னர் போலீசார் பிஎஸ்எம் அறுவருக்கும் மற்றவர்களுக்கும் எதிராக இன்னொரு சுற்று ஒடுக்கு முறையைத் தொடங்கியுள்ளனர்,” என சுரேந்திரன் குறிப்பிட்டார்.

பிகேஆர் உதவித் தலைவருமான சுரேந்திரன் அந்த ஒன்பது பேருக்குமான வழக்குரைஞரும் ஆவார்.

ஜெயகுமார், எம் சுகுமாரன். பி லெட்சுமணன், சூ சோன் காய், ஆர் சரத்பாபு ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அவசர காலச் சட்ட ஐவர் ஆவர்.

எம்சி சுப்ரமணி, பி இந்திரா, எஸ் திவ்யகுமார், எம் ரவிந்திரன், ஆகியோர் மற்ற நால்வர் ஆவர்.

புலனாய்வை போலீஸ் உறுதிப்படுத்தியது

புலனாய்வு நடத்தப்படுவது பற்றி தொடர்பு கொள்ளப்பட்ட போது ஆராவ் ஒசிபிடி முகமட் நாட்ஸ்ரி ஹுசேன் உறுதிப்படுத்தினார். பிஎஸ்எம்-மின் “உடாலா இத்து— பெர்சாராலா ! ( “Udahlah tu… Bersaralah! ) இயக்கம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களுடன் அந்தப் புலனாய்வு தொடர்புடையது என அவர் கூறினார்.

“சாட்சிகள் என்னும் முறையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவர்களை நாங்கள் அழைத்துள்ளோம்”, என்றார் அவர்.

அந்தத் துண்டுப் பிரசுரங்கள் பினாங்கில் அல்லாமல் ஆராவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் புலனாய்வு அவசியம் என்றும் நாட்ஸ்ரி சொன்னார்.

தங்கள் சொந்த மாநிலங்களில் வாக்குமூலம் கொடுப்பதற்கு அவர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் பிஎஸ்எம்-மைக் குறை கூறினார்.

“அவர்கள் ஒரு சமயம் ஈப்போ என கூறுகின்றனர். அடுத்த நிமிடம் வேறு இடத்தில் என்கின்றனர். அதானல் நாங்கள் ஆராவில் அதனைச் செய்வது என முடிவு செய்தோம்”, என்றார் அவர்.

அந்தப் புலனாய்வு மீதான போலீஸ் புகார் இன்னும் பிஎஸ்எம்-முக்குக் கொடுக்கப்படவில்லை என்பது தனக்குத் தெரியாது என்றும் தமது அதிகாரிகளிடம் அது குறித்து வினவுவதாகவும் நாட்ஸ்ரி சொன்னார்.