ஹிண்ட்ராப்பின் இன ஒழிப்பு கூற்று “மிகைப்படுத்தப்பட்டது”

ஆளும் பிஎன் கூட்டணி இந்தியர் இன ஒழிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகக்  கூறுவது  “‘மிகைப்படுத்தப்பட்டது” என 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூரக குறிப்பு ஒன்று கூறியது.

அதனால் ஹிண்ட்ராப்பின் சட்டப்பூர்வ போராட்டத்துக்கான “பொது மக்கள் அனுதாபம் குறையும்” என அந்தக் குறிப்பு தெரிவித்தது. அந்தக் குறிப்பை வில்கிலீக்ஸ் இணையத் தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

“சிறிய அளவிலான அரசு சாரா அமைப்பான ஹிண்ட்ராப், 2007ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி ஆர்ப்பாட்டத்தின் மூலம் இந்தியா வம்சாவளியினருடைய மனக் குறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டது. ”

“ஆனால் ஹிண்ட்ராப் அந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு எடுத்துக் கொண்ட முறை காரணமாக – மிகைப்படுத்தப்பட்ட இன ஒழிப்பு கூற்று உட்பட- இனங்களுக்கு இடையிலான உறவுகள் நலிவடையும் சாத்தியத்துக்கும் மலேசிய சமுதாயத்தில் இருந்த அனுதாபம் குறைவதற்கும் வழி வகுக்கும்”, என வில்கிலீக்ஸ் வெளியிட்ட குறிப்பு கூறியது.

2007ம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராப் பேரணிக்குச் சில வாரங்கள் கழித்து டிசம்பர் 16ம் தேதி அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்தக் குறிப்பு அனுப்பப்பட்டது.

“தாக்கத்தை” ஏற்படுத்தக் கூடிய ‘பொருத்தமான வியூகத்தை’ ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் பேரணி பற்றிய மதிப்பீட்டில் கூறப்பட்டுள்ளது.”

“மலேசியாவில் உள்ள இந்தியர்கள் நிலை குறித்த தேசிய விவாதத்தை தூண்டி விட்டதின் மூலம்  மஇகா நீண்ட காலமாக சாதிக்க முடியாததை ஹிண்ட்ராப் நிறைவேற்றி விட்டது. ஆனால் அதன் தாக்கம் இனச் சமநிலையை அடைய ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் குந்தகமாக அமையலாம்”, என அந்தக் குறிப்பு தெரிவித்தது.

அந்தப் பேரணிக்கு  சில மலாய்த் தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து “மலாய் மேலாண்மையை நிலை நிறுத்த மலாய் தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்,” என விடுத்த கோரிக்கைகளை அந்தக் குறிப்பு சுட்டிக் காட்டியது.

அரசாங்கம் ஹிண்ட்ராப்புக்கு எதிராக எடுத்த கடும் நடவடிக்கை பிஎன்-னுக்குப் பாதகமாக முடியும் என்றும் அது தெரிவித்தது.

பிஎன் பங்காளிக் கட்சிகள் ஆத்திரமடைந்தன

“அந்தப் பேரணி பிஎன்-னுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணிக்கான இந்தியர் ஆதரவு பேரணியால் பாதிக்கப்பட்டுள்ளதால் மஇகாவுடன் இடங்களை மாற்றிக் கொள்ள கூட்டணியில்  இரண்டாவது பெரிய கட்சியான மசீச மறுத்தது.”

பிஎன் உள் வட்டாரங்கள் 2008ல் “வரும் தேர்தல்களில் இந்திய வாக்காளர் குறித்து அதிகக் கவலை” அடைந்திருப்பதாகவும் அந்த அரசதந்திரக் குறிப்பு தெரிவித்தது.

அந்தத் தேர்தலில் பிஎன் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. அந்தத் தேர்தல் முடிவுகள் “அரசியல் சுனாமி” என்றும் வருணிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் மஇகா மற்றும்  இதர தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை இந்தியர் வாக்குகள் கிடைக்கும் என்ற உறுதியான நிலை மாறி இறுக்கமான போட்டி நிலவும் போது அவர்களுடைய வாக்குகளைக் கூட்டணிக் கட்சிகள் நம்பியிருக்க முடியாத நிலை உருவானது.”

“எடுத்துக்காட்டுக்கு மஇகா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொகுதிகளை மாற்றிக் கொள்ள மசீச மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. காரணம் அந்த மாவட்டத்தில் இந்திய வாக்காளர்களில் பெரும்பாலோர், அங்கு நிறுத்தப்படும் எந்த பிஎன் வேட்பாளரையும் மருட்டப் போவதாக கூறியதாகும்.”

“தகவல் அறிந்த” மசீச உறுப்பினர் ஒருவர்,”இந்தியர்களுடைய குறைகளை சீனர்கள் புரிந்து கொள்கின்றனர். ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த விஷயங்களை அரசாங்கத்திடம் ஹிண்ட்ராப் எழுப்பியதுதான் துரதிர்ஷ்டமான விஷயமாகும்,” என அந்தக் குறிப்பு மேலும் கூறியது.

“அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் மஇகாவை பிரதிநிதிக்காமல்” எதிர்காலத்தில் இந்தியர் ஒருவருக்கு இரண்டாவது அமைச்சரவைப் பதவியை வழங்குவது பற்றிக் கூட பிரதமர் யோசித்ததாக அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் கூறியதாகவும் அது  மேலும் தெரிவித்தது.

2008ம் ஆண்டு பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்த பின்னர் அப்துல்லாவிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் நஜிப் ரசாக், அண்மையில் மஇகா தலைவர் ஜி பழனிவேலுக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். இந்திய சமூகத்தின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக நஜிப் மேற்கொண்ட பலவீனமான முயற்சி அதுவென வருணிக்கப்பட்டுள்ளது.