பெல்டாவை பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எதிர்த்துப் போராடும் அரசு சாரா அமைப்பான அனாக்-கின் தலைவர் மஸ்லான் அலிமான் நேற்றிரவு சபாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் பாஸ் மத்தியக் குழு உறுப்பினரும் ஆவார்.
“நான் இன்றிரவு மணி 8.45 வாக்கில் கோத்தா கினாபாலு விமான நிலையம் வந்தடைந்தேன், குடிநுழைவுத் துறை என்னைத் தடுத்து வைத்தது. நான் 1959ம் ஆண்டுக்கான குடி நுழைவுச் சட்டத்தின் 65(1) பிரிவின் கீழ் சபாவுக்குள் நுழைய சபா மாநில அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை,” என மஸ்லான் நேற்றிரவு மலேசியாகினிக்கும் அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூரைச் சேர்ந்த மஸ்லான் இன்று சபா மாநிலத் தலைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘123 Bangkit’ என்னும் பேரணியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய நில உரிமைகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்ட அந்தப் பேரணிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
மஸ்லான் பாஸ் கட்சியின் நில, பிரதேச விவகாரப் பிரிவின் தலைவரும் ஆவார்.