ஏஜிக்கு எதிராக சிவராசா அவசரத் தீர்மானம் கொண்டு வருவார்

பிகேஆர் சுபாங் எம்பி ஆர்.சிவராசா,நேற்று மலேசியாகினியில் வெளியிடப்பட்டிருந்த சட்டத்துறைத் தலைவர் கனி பட்டேய்ல் இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்செயல்களின் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசரத் தீர்மானம் கொண்டுவரப்போவதாகக் கூறினார்.

12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதுவே 13வது நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் கூடும் கடைசி நாடாளுமன்றக் கூட்டமாக இருக்கலாம்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட முக்கியமான விவகாரங்களை அவசரமாக விவாதிக்க இடமளிக்கும் நிலை ஆணை 18(1)-இன்கீழ் அத்தீர்மானம் புதன்கிழமை பதிவு செய்யப்படும் என்று ஒரு வழக்குரைஞருமான சிவராசா தெரிவித்தார். 
நாடாளுமன்றத்தில் ஒரு நாளைக்கு ஒரு அவசரத் தீர்மானத்தை மட்டுமே கொண்டுவர முடியும்.

மற்றொரு பிகேஆர் எம்பியான ஜுரைடா கமருடின்,ஊழலில் சிக்கிக்கொண்டிருக்கும் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி)மீது வெள்ளிக்கிழமை ஒரு அவரசத் தீர்மானத்தைக் கொண்டுவருவார்.

முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராகிமின் கண் காயமடைந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் போலீஸ் படைத்தலைவர் ரஹிம் நோர் சம்பந்தப்பட்ட புதிய சாட்சியங்கள் கிடைத்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் துறை(சிஐடி) முன்னாள் தலைவர் ரம்பி யூசுப்(வலம்) கூறியிருக்கும் செய்தி தம்மிடம் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியிருப்பதாக சிவராசா கூறினார்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது தாக்கப்பட்டதால் அன்வாரின் கண்ணில் காயமேற்பட்டு உலக அளவில் அது பற்றிப் பேசப்பட்டது.

அச்சம்பவம் தொடர்பில் ரகிம் பதவி விலக நேர்ந்தது.அவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

நேற்று மலேசியாகினி வெளியிட்ட செய்தியின்படி எம்ஏஎஸ் முன்னாள் உரிமையாளர் தாஜுடின் ரம்லிக்கு எதிராகவும் ரம்லியிடம் புதிய சாட்சியங்கள் இருப்பதாகத் தெரிகிறது.அவை, தாஜுடினுக்கு எதிராக  எம்ஏஎஸ் செய்துள்ள போலீஸ் புகார்கள் தொடர்பான சாட்சியங்கள்.

“நேற்றைய மலேசியாகினி செய்தி அறிக்கை, ஏஜிக்கு எதிராக ஊழல்,அதிகார அத்துமீறல், சாட்சியங்களை மாற்றியது போன்ற விவகாரங்கள் குறித்து விசாரணை செய்ய நல்ல அடித்தளத்தை அமைத்துத் தருகிறது ”, என சிவராசா குறிப்பிட்டார்.

“அவை மிக முக்கியமான குற்றச்சாட்டுகள். நாடாளுமன்றம் அவற்றை விவாதித்து ஒரு விசாரணையை நடத்த வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.