12வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தை யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு ஹாலிம் முவாட்ஸாம் ஷா இன்று தொடக்கி வைத்தார்.
அந்தத் தொடக்க நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அமைச்சர்கள், அரசதந்திரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேவான் ராக்யாட் நாளை தொடக்கம் ஏப்ரல் 12ம் தேதி வரை கூடும். தேவான் நெகாரா ஏப்ரல் 23ம் தேதி தொடக்கம் மே 10ம் தேதி வரை கூடும்.
காலை 10 மணிக்கு துவாங்கு அப்துல் ஹாலிமும் ராஜா பரமைசுரி அகோங் துவாங்கு ஹாஜ்ஜா ஹமினாவும் நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.
தேசிய கீதமான நெகாரா கூ இசைக்கப்பட்ட பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம், மேஜர் அமிர்ஸா முகமட் அஸ்ஹாரி தலைமையில் முதலாவது அரச மலாய்ப் பட்டாளத்தின் 103 வீரர்களும் நான்கு அதிகாரிகளும் வழங்கிய படை வணக்கத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது வணக்கம் தெரிவிக்கும் வகையில் 21 பீரங்கிக் குண்டுகள் வெடிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு 14வது யாங் டி பெர்துவான் அகோங்காக துவாங்கு அப்துல் ஹாலிம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தொடக்கி வைக்கும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
கெடா சுல்தானான அவர் ஏற்கனவே 1970ம் ஆண்டு முதல் 1975ம் ஆண்டு வரையில் நாட்டின் ஐந்தாவது யாங் டி பெர்துவான் அகோங்காக இருந்துள்ளார்.
பெர்னாமா