அடுத்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ள மகளிர்,குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலில், தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என மசீச இளைஞர் பகுதி தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 8-இல், அமைச்சர் பதவியைத் துறக்கும் ஷாரிசாட்டின் முடிவை மசீசா இளைஞர் பகுதி துணைத் தலைமைச் செயலாளர் லோ சியு ஜூன் வரவேற்றார்.ஆனால், நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனில்(என்எசி) ஷாரிசாட் குடும்பத்தினர் ஊழலிலும் அத்துமீறல்களிகும் ஈடுப்பட்டனரா என்பதைக் கண்டறியும் போலீசும் மற்றும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய விசாரணைகள் தொடர வேண்டும் என்றாரவர்.
“ஊழல் அல்லது மோசடி நிகழ்ந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
“ஷாரிசாட் எடுத்தது நல்ல முடிவு.அமைச்சர் பதவியிலிருந்து நின்ற பின்னர், என்எப்சி விவகாரத்தில் அவருக்குத் தொடர்பில்லை என்று அறிவிக்கப்படும்வரை அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது”, என்று லோ கூறினார்.
இன்னொரு அறிக்கையில் கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியோங்கும்(வலம்), ஷாரிசாட்டின் முடிவை வரவேற்றார்.
“பிஎன் அரசின் நலனுக்கு உகந்த சரியான ஒரு செயலை அவர் செய்கிறார்.இறுதியில் இப்படி ஒரு முடிவைச் செய்திருப்பது திருப்தி அளிக்கிறது”, என்று மா கூறினார்.
தனிப்பட்ட ஒருவரின் நலனைவிடவும் கட்சி நலன் முக்கியமானதாகும் என்றாரவர்.
ஆனால், அம்னோ விளம்பரப் பிரிவுத் தலைவர் அஹ்மட் மஸ்லான், அம்னோ மகளிருக்கும் பிஎன் மகளிருக்கும் ஷாரிசாட்டின் சேவை இன்னமும் தேவைப்படுவதாகக் கூறினார்.
ஷாரிசாட் குற்றமற்றவர் என்றால் எம்ஏசிசி அதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
நேற்று அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஷரிசாட், அம்னோ மற்றும் பிஎன் மகளிர் பகுதி தலைவியாக தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறினார்.2009-இலிருந்து அவர் அப்பதவிகளை வகித்து வருகிறார்.