ஊழல் புலனாய்வு ஒன்றை மறைப்பதற்கு நாட்டின் மிகவும் வலிமையான போலீஸ் அதிகாரியும் சட்டத் துறைத் தலைவரும் ரகசியக் கும்பல் தலைவர் ஒருவரும் கூட்டாகச் சதி செய்ததாகக் கூறப்படுவது மீது ஆதாரங்களைக் காட்டுமாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஜோகூர் ரகசியக் கும்பல் தலைவர் கோ செங் போ அல்லது தெங்கு கோ, 2007ம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு வழி வகுத்த தகவல்களை தந்த பலர் அந்த வழக்கை புலனாய்வு செய்த ஆறு போலீஸ் அதிகாரிகள் மீது பழி போடுவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாக நேற்று மலேசியாகினியில் வெளியான செய்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.
“அதனை நிரூபியுங்கள். அவர்கள் அதனை நிரூபிக்க முடியுமானால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்.”
“நான் எப்போதும் கூறுவது போல யாரும் தங்களைச் சட்டத்துக்கு மேலாக கருதக் கூடாது,” என ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்றத்தில் மலேசியாகினி சந்தித்த போது கூறினார்.
தெங்கு கோ-வை புலனாய்வு செய்த ஆறு போலீஸ் அதிகாரிகள் மீது ஆதாரங்களை ஜோடித்ததாக 2007ம் ஆண்டு பொய்க் குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் சட்டத் துறைத் தலைவர், அப்போதைய தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், அந்த ரகசியக் கும்பல் தலைவர் ஆகியோர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் போலீஸ்காரர்கள் இறுதியில் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 2011ம் ஆண்டு மத்தியில் விடுவிக்கப்பட்டார்.