ஷரிசாட் பதவி விலகுகிறார்,வான் அசிசா ஏன் விலகவில்லை?-பிஎன்

கட்சியின் நலன்கருதி பதவி விலகல் என்ற “தியாகத்தை”ச் செய்துள்ளார் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் ஆனால், பக்காத்தான் ரக்யாட் தலைவர் மட்டும் தம் கணவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது தொடர்ந்து பதவியைப் பிடித்துக்கொண்டிருந்தது ஏன் என்று பிஎன் தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில், தம் கணவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும் பிகேஆர் தலைவராக தொடர்ந்து இருந்தார்.அவர் ஏன் பதவி விலகவில்லை?”, என்று பிரதமர்துறை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று வினவினார்.

1998-இல் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு 1999-இல், ஊழல் வழக்கில் ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது பிகேஆர் தலைவராக இருந்தவர் வான் அசிசா.

அதன்பின்னர் குதப்புணர்ச்சி வழக்கில்  அன்வாருக்கு ஒன்பதாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் அக்குற்றச்சாட்டைக் கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நேற்று ஷாரிசாட்(இடம்), ஏப்ரலில் செனட்டர் தவணை முடிவுக்கு வரும்போது அமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார். ஆனால், அம்னோ மற்றும் பிஎன் மகளிர் பகுதி தலைவியாக அவர் தொடர்ந்து இருப்பார்.

அவரது அறிவிப்புத்  தொடர்பில் எதிர்வினையாற்றிய அம்னோ தலைவர்கள்,அவரது பதவி விலகலை “அரசாங்க மற்றும் கட்சியின் நலன்கருதி செய்யப்படும்  தியாகம்” எனப் பாராட்டினர்.

ஆனால்,விமர்சகர்கள் “செனட்டர் பதவிக்காலம் முடியும் வரை அமைச்சர் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்”, என்பதைச் சுட்டிக்காட்டினர்.

அவரின் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட என்எப்சியில் பல முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதால் ஷரிசாட் பதவி விலக வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே நெருக்குதல் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

மாற்றரசுக் கட்சிகள் பிகேஆர்  தலைமையில், அரசாங்கம் அந்நிறுவனத்துக்கு எளிய நிபந்தனையில் வழங்கிய ரிம250மில்லியன்  கடனை, அதற்குத் தலைவராகவுள்ள அவரின் கணவர் முகம்மட் சாலேயும் அதில் இயக்குனர்களாகவுள்ள அவர்களின் பிள்ளைகள் வான் ஷஹினூர் இஸ்ரான், வான் இஸ்ஸானா பத்திமா ஸபேடா, வான் ஷாஹினுர் இஸ்மிர் ஆகியோரும்   தவறான வழிகளில் செலவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளன.