ட்ரியாங் தொகுதியைத் திரும்பக் கைப்பற்றுக:பிஎன் வலியுறுத்து

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், அடுத்த தேர்தலில் பாரிசான் நேசனல் தேர்தல் இயந்திரம் கடுமையாக பாடுபட்டு டிஏபி வசமுள்ள ட்ரியாங் சட்டமன்றத் தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

“அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்றுவதே நமக்கு நோக்கமாக இருத்தல் வேண்டும். பிஎன் பங்காளிக் கட்சிகள் ஒன்றுபட்டு கடுமையாக பாடுபட்டால் அதை வெற்றிகொள்ள முடியும்”, என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இஸ்மாயில் சப்ரி, நேற்றிரவு பெரா ராக்கான் மூடா வளாகத்தில் 400 பிஎன் தேர்தல் ஊழியர்கள் கலந்துகொண்ட வாக்களிப்பு முகவர்களுக்கான பயிற்சி ஒன்றைத் தொடக்கி வைத்த உரையாற்றினார்.

70 விழுக்காட்டு சீனர்களையும் 24விழுக்காட்டு மலாய்க்காரர்களையும் வாக்காளர்களாகக் கொண்ட ட்ரியாங், ஐந்து தவணைகளாக டிஏபியிடம் இருந்து வருகிறது.

உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சரான இஸ்மாயில் சப்ரி, டிரியாங் தொகுதி மக்கள் மாற்றம் காண ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறினார்.

அத்தொகுதியில் சீன வாக்காளர்களிடையே பிஎன்னுக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் அவர் கூறினார்.

-பெர்னாமா