என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன நிர்வாகத் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்களையும் 1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தை மீறிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரியிருக்கிறார்.
National Meat and Livestock Corporation என்ற நிறுவனத்துக்காக 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதிக்கும் டிசம்பர் மாதம் 4ம் தேதிக்கும் இடையில் பங்சாரில் உள்ள One Menerung வளாகத்தில் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளைக் கொள்முதல் செய்வதற்கு என்எப்சி நிதிகளில் 9,758,140 ரிங்கிட்டைப் பயன்படுத்தியதாக நம்பிக்கை மோசடிக்கான குற்றவியல் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதே பிரிவின் கீழ் அவர் மீது என்எப்சி நிதிகளிலிருந்து National Meat and Livestock Corporation-க்கு 40 மில்லியன் ரிங்கிட்டை 2009ம் ஆண்டு மே 6ம் தேதிக்கும் நவம்பர் 16ம் தேதிக்கும் இடையில் மாற்றியதாகவும் 64 வயதான முகமட் சாலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் வாசிக்கப்பட்ட போது முகமட் சாலே அமைதியாக காணப்பட்டார்.
என்எப்சி ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் அனுமதி இல்லாமல் நிதிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது 1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் 132வது பிரிவின் கீழ் குற்றமாகும்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு கசையடி, அபராதம் ஆகியவற்றுடன் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத தண்டனை விதிக்கப்பட முடியும்.
நிறுவனச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா சார்பில் ஆஜரான பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் பத்ருல்முனிர் புஹாரி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 50,000 ரிங்கிட் ஜாமீன் நிர்ணயிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
குற்றச்சாட்டுக்களிலிருந்து தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு முகமட் சாலே இங்கு இருப்பதாலும் அந்த விவகாரத்தை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திருப்பதாலும் அவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் அபாயம் இல்லை என்றும் அவர் வாதாடினார்.
ஜாமீன் 500,000 ரிங்கிட்டாக நிர்ணயம் செய்யப்பட்டது
அந்தத் தொகைக்கு அரசு வழக்குரைஞர் டிபிபி சுல்கிப்லி அகமட் ஒப்புதல் அளித்தார். ஆனால் நீதிபதி கோமதி சுப்பையா, குறைந்த பணம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதை விட பெரிய தொகை ஜாமீனாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்
“வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் குற்றச்சாட்டுக்களைக் கருத்தில் கொண்டும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் தமது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 500,000 ரிங்கிட் ஜாமீனை நான் நிர்ணயம் செய்கிறேன்,” என்றார் அவர்.
அந்த வழக்கு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
பொது மக்கள் பகுதியில் காணப்பட்ட ஷாரிஸாட்டும் அவர்களுடைய மூத்த புதல்வர் வான் ஷாஹினுர் இஸ்மிரும் மிகவும் சோகமாகக் காணப்பட்டனர். இஸ்மிர் ஜாமீனைக் கட்டினார்.
குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்ட பின்னர் நிருபர்கள் அவர்களை அணுகிய போது எந்தக் கருத்தும் தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
ஊடகங்களின் கேள்விகளினால் ஆத்திரமடைந்தவர் போலக் காணப்பட்ட சாலேயும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
National Meat and Livestock Corporation என்ற நிறுவனம் என்எப்சி இயக்குநர்களுமான சாலே-க்கும் அவரது பிள்ளைகளுக்கும் தனிப்பட்ட சொந்த நிறுவனமாகும்.